பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கலைவாணன்


புகழேந்தி:- தவறொன்றுமில்லையே! அப்படியானால் சொல்லுகிறேன். கானகத்தில் பூத்துக் கமழும் மலர்களை மனிதர்கள் பரித்தெடுத்துத் தொடுத்துச் சூடிக் கொள்வதால் மலரின் எழிலும் மணமும் அதிகப்படு கின்ற தென்பதுதானே குணவதியின் வாதம்?

பாண்டியன்:- ஆமாம்.

புகழேந்தி:- அந்த மலர் எது? மலரை அழகுபெறத் தொடுத்தவர் யார்? அதைச் சூடிக்கொள்வோர் யார்? இது தான் இப்போது முடிவு செய்ய வேண்டிய விஷயம்.

பாண்டியன்:- உ.ம்......மலர், அதைத் தொடுத்தோர் இரண்டும் இப்போது தெரிகிறது. ஆனால்!......அதைச் சூடிக்கொள்...வோ...ர்...?

புகழேந்தி:- மலரையும் தொடுத்தவரையும் சொல்லுங்கள், பிறகு சூடிச்கொள்வோரைப் பற்றி யோசிப்போம்.

பாண்டியன்:- அந்த மலர்தான் குணவதி.

குணவதி:- மலரை அழகுபெறத் தொடுத்தவர்?

பாண்டியன்:- நமது புலவர் மணிதான்.

புகழேந்தி:- சரி, மணமும் எழிலும் உள்ள மலரை அழகு பெறத் தொடுத்தாகி விட்டது. இனி அதைச் சூடிக் கொள்ளத் தகுந்த ஒரு வீர வாலிபன்தான் தேவை! என்ன நான் சொல்வது சரிதானே?

குணவதி:- போங்கள் ஸ்வாமி! இதற்குத்தான் இவ்வளவு பீடிகை போட்டீர்களா?

புகழேந்தி:- பார்த்தாயா கோபித்துக் கொள்ளுகிறாயே, இதற்காகத் தானே முதலிலேயே உன் சம்மதம் பெற்று இதைச் சொன்னேன்.

குணவதி:- எப்பொழுதும் பிறரைத் திகைக்க வைப்பது தானே கவிஞர்களின் கற்பனை.