பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை
சிலம்புச் செல்வர்-டாக்டர். ம.பொ. சிவஞானம்
தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழுத்தலைவர்

தமிழ் மொழி இயல் - இசை - நாடகம் என்ற மூன்று பகுதிகளையும் கொண்டதாகக் கருதப்படுகின்றது. இதனால், 'முத்தமிழ்” என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. ஆயினும், தமிழில் நாடக நூல்கள் மிகவும் அரிதாகவே தோன்றி வருகின்றன. சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் நாடகக் காப்பியமாக உரையாசிரியர்களால் உணர்த்தப்படுகிறது. ஆயினும், அதுவும் காளிதாசன் படைத்த சாகுந்தலம் போன்று பாத்திரங்களையே பேச வைக்கும் நடிக்கும் காப்பியமன்று. ஒன்றிரு காதைகளைத் தவிர, மற்ற காதைகளில் எல்லாம் ஆசிரியர் இளங்கோவடிகளே பேசுகிறார். ஆம்; காப்பியத்தைப் படிப்போர் கண்டு ரசிக்கத்தக்க காட்சிகளாக அல்லாமல் காதைகளைக் கொண்ட கதையாகவே அமைந்திருக்கிறது. அண்மைக் காலமாகத்தான் சிலம்புக்குப் பின்னர் அந்த நிலையில் கூட நாடக இலக்கியங்கள் தமிழில் தோன்றவில்லை. இந்த நூற்றாண்டில் தான் ஓரளவு நாடகங்கள் தோன்றி வருகின்றன. அவையும் தமிழ் மக்களால் அதிகமாகப் போற்றப்படவில்லை. தமிழர் நாடகங்களைப் பார்ப்பதில் ஆர்வங்காட்டுவது போல நாடகங்களைப் படிப்பதில் ஆர்வங் காட்டுவதில்லை. தமிழில் நாடக நூல்கள் தோன்றாததற்கு மக்களுடைய மனோ பாவமும் ஒரு காரணமாகலாம்.

இத்தகைய சூழ்நிலையிலும் துணிந்து நாடகங்களை எழுதுபவர்களை நாம் பாராட்டவேண்டும். கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி நாடகமேடை அனுபவமுள்ளவர். தாம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு நாடக நூல்களைப் படைக்கும் திறனைப் பெற்றிருக்கிறார்.

'அந்தமான் கைதி’ என்னும் பெயரில் அரிய நாடக மொன்றை அன்பர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதி, நாடக உலகில் பெயர் பெற்ற டி.கே.எஸ். சகோதரர் குழுவினரைக் கொண்டு நடிக்கச் செய்தார். அது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு வெற்றிக்கொடி உயர்த்தியது.

"கலைவாணன்” என்னும் பெயரில் கவிஞர் கு.சா.கி. எழுதிய இந்த நூலும் நாடக இலக்கியம் தான். ஆம்; பாத்திரங்களையே பேச வைத்து ஆசிரியர் மறைந்து விடுகிறார்.