பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

53

குணவதி குமுதத்தின் துனண கொண்டு யாவரையும் வணங்கி ஆசி பெறுகிறாள். குலோத்துங்கனும் வணங்கி ஆசி பெறுகிறான்.)

பாண்டியன்:- சோழர் குலத்தின் சுடர்மணி விளக்கே! கண்டிப்பும் கட்டுப்பாடும் கவலையும் இன்னதென்றே தெரியாமல் வளர்ந்த என் அருந்தவப் புதல்வி இன்று முதல் தங்கள் அடைக்கலம் அறிவிலும் அனுபவித்திலும் வயதிலும் சிறியவளாகிய குணவதியின்பால் குற்றம் காண்பினும், மன்னித்து மாசு நீக்கி இல் வாழ்க்கையென்னும் இன்பத்துறைக்குத் தோன்றாத் துணையாயிருந்து மகிழ்ச்சியுடன் அறிவுரை புகட்டி ஆதரிப்பது இனி உங்கள் கடன். குணவதியின் விருப்பப்படியே எமது அரசவைப் புலவரையும் கெளரவச் சீதனமாக அனுப்புகிறேன். பெருமை மிக்க அவரைக் கெளரவிக்க வேண்டியதும் தங்கள் பொறுப்பேயாகும்.

குலோத்:- மாட்சிமை தங்கிய மன்னரே; சோழர் குலத் திருவிளக்கைத் தூண்டுவிக்கப் போகும் திருமகளும் கலைமகளும் தங்கள் திருமகளே என்பதுதான் எங்கள் முடிவு. புலவர் பெருமானின் வருகை எங்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதுடன் சோழமண்டலமே புனிதமும் புளகமும் அடையுமென நினைக்கிறேன்.

பாண்டியன்:- இந்த மகிழ்ச்சியும் அன்பும் என்றும் நம் இரு நாட்டினரிடையேயும் நிலவ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

(திரை)