பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

55

நேரம் வேடிக்கை பார்த்தோம்; ஆடினோம்; பாடி னோம்: போனோமென்றிருப்பதே இல்லை. சதா......... அதைப் பார்; இதைப்பார்; அங்கே பார்; இங்கே பார் என்று தொல்லை செய்து கொண்டே இருந்தால் நான் எதை என்று பார்ப்பது?

குணவதி:- கண்ணுக்கும் புலனுக்கும் களிப்ப யுண்டாக்கும் இன்பக் காட்சிகளைக் காண்பதா உனக்குத் தொல்லையாயிருக்கிறது! நீ ஒரு அதிசயப் பிரகிருதியடீ, குமுதா!

குமுதம்:- பின்னே? என்ன, எப்போதும்தான் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போய் இருக்கிறோமே! இதில் பார்க்காத அதிசயம் புதிதாக என்ன இருக்கிறதாம் பார்ப்பதற்கு?

குணவதி:- என்ன! இறைவனின் எல்லையற்ற இயற்கை அழகெல்லாம் பார்த்துப் பார்த்துச் சலித்து விட்டதா உனக்கு அடடா என்ன ரசிகமணியடீ நீ!

குமுதம்:- இல்லை; உணர்ச்சியற்ற ரசிக உள்ளமற்ற வெறும் கட்டையென்றுதான் வைத்துக் கொள்ளேன்.

குணவதி:- வைத்துக் கொள்வதென்ன? அதில் இன்னுமா உனக்குச் சந்தேகம்! கட்டையேதான் நீ. இல்லா விட்டால் மாலைக் காட்சியின் வனப்பைக் காண்பதில் சலிப்புண்டாகுமா உனக்கு?

குமுதம்:- ஆமாம். சொல்லமாட்டாயா என்ன? கட்டை யென்றும் சொல்லுவாய். இனிமேல் கருங்கல்லென்று கூடச் சொல்லுவாய், நீயா சொல்லுகிறாய்? உன்னைப் பிடித்திருக்கிறதல்லவா, கவிதைப் பைத்தியம். அது வல்லவா உன்னை இப்படியெல்லாம் பேசச் சொல்லுகிறது.