பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கலைவாணன்

குணவதி:- யார்?நானா பைத்தியம்! உம்!–ஆம். இயற்கை எழிலைக்கண்டு ரசிப்பது, மனித சக்திக்கும் கற்பனைக்கும் எட்டாத வர்ண பேத நிகழ்ச்சிகளைக் காட்டும் மாலைவனப்பைக் கண்டு வியப்பது, ஜீவசிருஷ்டிகளின் விநோதச் செயல்களைக் கண்டும் பறவைகளின் இன்னிசையைக் கேட்டும் உவப்பது, மணமும், மனத்தைக் கவரும் எழிலும் நிறைந்த மலர்களைக் கண்டு களிப்பது, இலக்கிய இன்பத்திலும், கவிதை இன்பத்திலும் லயித்து தன்னை மறந்த பரவச நிலையை அடைவது; இவையெல்லாம் பைத்தியங்களின் செய்கைதானே?

குமுதம்:- இல்லை; அதற்குத்தான் உங்கள் கவிஞர் கூட்டத்தினர் ரசனை என்றொரு மாறுபெயரும் வைத்திருக்கிறார்களே! அப்படியும் சொல்லலாமல்லவா?

குணவதி:- ஆமாம்; குமுதா! நீ சொல்வதும் ஒருவகையில் உண்மைதான். கவிஞனும் ரசிகனும் சில சமயங்களில் உண்மையிலேயே பைத்தியமாகத்தான் ஆகிவிடுகிறார்கள். காரணம். அவர்கள் - எந்தப் பொருளைக் கண்டாலும் அப்பொருளின் உட்பொருளைக் காண முயற்சிக்கின்றனர். அப்பொழுதுதான் அவர்கள் சித்திரத்தில் ஜீவனையும் கற்சிலையில் காவியத்தையும், இயற்கை எழிலில் இறைவனின் சக்தியையும் காணுகின்றனர். கவிஞர்கள் முன்பு கற்பனையிற் கண்ட அற்புதங்களல்லவா இன்று ஒப்பற்ற காவியங்களாகவும் கவிதைகளாகவும் திகழுகின்றன. ஆஹா! வசந்தம் பூத்துக் குலுங்கும் புது மலர் மணத்தை வாரியிறைத்துப் புளக முண்டாக்கும் இவ்வின்ப வேளையில்......

குமுதம்:- (இடைமறித்து) மகாராஜாவும் உன்னுடன் இருந்தால் உனக்கு இன்னும் குதூகலமாகத்தான் இருக்கும்.