பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

57

குணவதி:- சீ போடி; இதுதான் உனக்குத் தெரியும். சந்தர்ப்பம் தெரியாமல் இப்படி யெல்லாம் பேசினால் எனக்குக் கோபம் வரும்.

குமுதம்:- வரும்; வரும்; உள்ளதைச் சொன்னால் கோபம் வராதா பின்னே?

குணவதி:- பின்னே என்னடியது? நானொன்று சொன்னால் நீ யொன்று சொல்கிறாயே!

குமுதம்:- நீ என்ன சொன்னாய்?

குணவதி:- இந்த இன்பக் காட்சிகளையெல்லாம் புகழ்ந்து பாட இப்போது நம்முடன் புலவர் இல்லையே என்று...

குமுதம்:- ஆஹாஹா! சோழ நாட்டின் மகாராணிக்குப் புலவரைப் பற்றிய ஞாபகம்கூட இருக்கிறதே! ஆச்சரியம்தான்......!

குணவதி:- குமுதா! நீ என்னடி சொல்லுகிறாய்?

குமுதம்:- ஆமாம் நீ நமது நாட்டில் இருந்தபோதெல்லாம் புலவரை ஒரு நாளாவது பார்க்காமல் இருப்பாயா? மன்னரின் காதல் வலையில் வீழ்தாலும் வீழ்ந்தாய்! உலகையே மறந்து விட்டாய்! உங்கள் காதல் விளையாடல்களுக்கு இடையூறாயிருக்க வேண்டாமென்று தானோ என்னவோ! புலவரும் பல நாட்களாக நம் அந்தப்புரம் பக்கமே வருவதில்லை.

குணவதி:- உண்மைதான். நானும் அவரைப் பார்த்து வெகு நாட்களாகி விட்டன. ஆனால் கற்பனை உலகில் திரியும் கவிஞர்களின் மனம் எப்போதும் ஒரே இடத்தில் நிலைத்திருக்க முடியாதல்லவா?