பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


புகழேந்திப் புலவருக்கும் ஒட்டக்கூத்தருக்குமிடையில் தோன்றி வளர்ந்து வந்த பூசலானது இந்நாடகத்திற்குக் கருப்பொருளாக எடுத்தாளப்பட்டுள்ளது. “கலைவாணன்” என்ற பெயரில் இந்நூல் அமைந்திருப்பினும் புலவர் புகழேந்தியையே நாடகத்தின் நாயகனாக ஆசிரியர் அமைத்துள்ளார். புகழேந்திக்கு கலைவாணன் என்ற மாற்றுப் பெயர் தந்ததற்கான காரணத்தை கவிஞர் கு.சா.கி ‘என்னுரை’யில் தந்துள்ள முன்னுரையில் விளக்கியுள்ளார்.

புலவர் புகழேந்திக்கும், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தருக்கும் பூசல் இருந்ததாகச் சொல்லப்படுவது கட்டுக் கதைதான் என்று கருதுவோருமுண்டு. ஆனால், இந்த நாடகம் புகழேந்தியின் வரலாறு பற்றிய ஆராய்ச்சியல்ல. புகழேந்தியின் புகழைப் பரப்ப ஆசிரியர் விரும்பி அவரைப் பற்றி தமிழ் மக்கள் மத்தியிலே புலவர் பெருமக்களால் பரப்பப்பட்ட செய்திகளிலே புதுமையானவற்றைத் தொகுத்து நாடகமாக ஆக்கியுள்ளார். புகழேந்தி பற்றிய கட்டுக் கதைகளை வரலாறாக நம்பித்தான் இந்த நாடகத்தில சேர்த்தாரென்று கருதுவது தவறாகும்?

கவிஞர் கு.சா.கி. நாடகக்கலை பற்றி சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை சொற்பொழிவொன்று நிகழ்த்தி அதனை நூலாகவும் வெளியிட்டுள்ளார். அதனைப் படிப்போர் தமிழ் நாடக்கலையின் வரலாற்றில் அவருக்குள்ள ஆராய்ச்சியறிவைப் பாராட்டுவார்கள்.

கவிஞர் கு.சா.கி. இந்நாடகத்தை எழுதிக் கொடுத்ததன் மூலம் இந்த அணிந்துரையின் தொடக்கத்தில் நான் கூறியபடி தமிழ் நாடக இலக்கியங்களின் எண்ணிக்கையைப் பெருக்க உதவி புரிந்திருக்கிறார்! அவருக்கு எனது பாராட்டு உரித்தாகுக.

ம. பொ. சிவஞானம்