பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கலைவாணன்

சித்திரவதை செய்வது; இருவர் தலையை ஒன்றாய்ப் பிணைத்துத் தேவியின் பெயரால் பலியிடுவது. இதுதான் நியாயமோ?

குலோத்:- ஆம்; இலக்கிய மணமறியாதவர்களும், கவிதா ஞானமே இல்லாதவர்களும், இலக்கணத்தைப் பற்றிக் கேள்விகூட இல்லாத கயவர்களும் புலவர்களென்று ஏன் வெளியே வரவேண்டும்? இத்தகைய அரைவாயர்களையெல்லாம் அவ்வப்போது தக்கபடி தண்டித்து அடக்காவிட்டால், உண்மைப் புலவர்களுக்கு இழிவுண்டாவதுடன் தமிழ்வளர்ச்சிக்கு இடையூறல்லவா?

குணவதி:- ஆஹாஹா! தாங்கள் தமிழை வளர்க்கக் கையாளும் முறை வெகு விநோதமாயிருக்கிறது. கலையார்வ மிகுதியால் தமிழ்த் தொண்டு செய்ய வரும் ஆரம்பப் புலவர்களையும் கவிஞர்களையும் ஆதரித்து அவர்களிடமுள்ள குறைகளை அன்புடன் எடுத்துச் சொல்லித் திருத்தி முன்னேற்றத்திற்குக் கொண்டு வருவதை விட்டு, ஆரம்பத்திலேயே அவர்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு சிறையும் சித்திரவதையும் சிரச்சேதமும் செய்வதுதான் தமிழை வளர்க்கும் முறை யென்று சொல்வதைவிட தமிழை அழிக்கும் முறையென்று சொல்வதே பொருந்தும்.

குலோத்:- குணவதி! இது அரசியல் விஷயம். இதில் நீ தலையிடுதல் முறையல்ல.

குணவதி:- நானும் ஒரு ராஜகுமாரிதான். மேலும் ராஜ மகிஷியாக வேறு இருக்கிறேன். நானும் அரசியல் கலைகள் பயின்றிருக்கிறேன். என்னால் இத்தகைய கொடுமைகளைப் பொறுத்திருக்க முடியாது. அது மட்டுமல்ல; கூத்தரின் கொடுஞ்செயலால் என் தந்தையின் அபிமானப் புலவரும் என் ஆசிரியருமாகிய புகழேந்திப் புலவரும் வருந்துவதாகத் தெரிகிறது.