பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

61

குலோத்:- திறமையிருந்தால் அரச சபையிற் கூத்தரின் கேள்விகளுக்குப் பதிலளித்துச் சமத்துவம் பெறலாம். இன்றேல் தோல்விக்கு வருந்த வேண்டியது நியாயம் தானே?

குணவதி:- தோல்வி யாருக்கென்பதைக் கூத்தரையே கேட்டால் சொல்லுவாரே! தங்களுக்குப் பெண் பேச வந்த போது பாண்டிய நாட்டரசவையில் சந்தர்ப்பமறியாது பேசி எங்கள் புலவரால் தோல்வியடைந்து யாவராலும் அவமதிக்கப்பட்டு வெட்கி நின்ற கூத்தர் தானே தாங்கள் இப்போது புகழ்ந்து பேசும் கூத்தர்?

குலோத்:- குணவதி எல்லாம் எனக்குத் தெரியும். கூத்தர் என்ற மதயானையைப் பகைத்த எந்தப் புலவனும் மீண்டதில்லை. ஆனால்......உன் பொருட்டு...! புகழேந்தி இன்னும் அவர் கோபத்திற்குத் தப்பியிருக்கிறார். ஞாபகமிருக்கட்டும்.

குணவதி:- இல்லை; எனக்காகவுமில்லை. கூத்தர் என்ற மதயானை புகழேந்தி என்ற சிங்கத்தைக் கண்டு மருண்டு ஒதுங்கியிருக்கிறது.

குலோத்:- குணவதி! வினையை விலைகொடுத்து வாங்க முயற்சிக்கிறாய்.

குணவதி:- இல்லை. நியாயத்திற்குத்தான் வாதாடுகிறேன்.

குலோத்:- நியாயம் எனக்குத் தெரியும். இனி எப்பொழுதும் நம்மிடையே இத்தகைய வாதம் நிகழக் கூடாதென்பது ஞாபகமிருக்கட்டும். நான் வருகிறேன்.

(கோபத்துடன் செல்லுகிறான்)

(திரை.)

இதை அடுத்து - விகடகவி புகழேந்தியைத் தேடி வந்து அளவளாவி மகிழ்தல். கூத்தர் குறுக்கிட்டுப் பேசி அவமானமும் ஆத்திரமும் அடைதல்.