பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ஆய்வுரை

டாக்டர் சிலம்பொலி சு. செல்லப்பன்

எம்.ஏ., பி.டி., பி.எல்., பிஎச். டி.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்.

“ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்ற தொடருக்கு வழங்கி வரும் செவிவழிக் கதையை, சில தனிப்பாடல்களுடன் இணைத்து அருமையானதொரு நாடகத்தைக் “கலைவாணன்” என்னும் தலைப்பில் இயற்றியுள்ளார், கவிஞர் கலைமாமணி கு.சா.கி. அவர்கள்.

இரட்டைத் தாழ்ப்பாள்-விளக்கம்

ஒட்டக்கூத்தர் பாடல்கள் பொருள்நலம் செறிந்தவை. மற்றையோர் பாடல் மாளிகையுள் நுழைந்து திளைக்க ஒரு தாழ்ப்பாளைத் திறந்தால் போதும்; கூத்தரின் பாடல் மாளிகையோ இரட்டைத் தாழ்ப்பாள்கள் கொண்டவை. இரண்டையும் திறந்தால்தான் உள் நுழைந்து மாளிகையின் எழிலைக் காணமுடியும். இக்கருத்திலேயே “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்ற மொழி எழுந்ததென்பர் அறிஞர். இவ்வாறிருக்க ஏனோ இத்தொடர் மேற்கண்டவாறான கதைக்கு இடமளித்துவிட்டது. இது எவ்வாறாயினும் ஆகுக: இக்கதையைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ள கவிஞர் கு.சா.கி. அவர்கள், நாடக இலக்கணமனைத்தும் பொருந்தி வர இதனை அருமையானதொரு நாடகமாக்கியிருக்கிறார்.

நாடக நிலைகள்

நாடகங்கள் தொடக்கம், சிக்கல், உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு என ஐந்து நிலைகள் கொண்டவையாக இருக்க வேண்டும். இவற்றைப் பரிதிமாற் கலைஞர் தம் நாடக இலக்கண நூலில் முறையே முகம், பிரதி முகம், கருப்பம், விளைவு, துய்த்தல் எனக் குறிப்பிட்டுள்ளார். கீழ்க்காணும் வரைபடம் இதனைத் தெளிவுபடுத்தும்.