பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

69

விகடகவி:- ஆமாம் அவரேதான். இந்தப் புகழேந்திப் புலவருடன் சேர்ந்ததினால்தான் என் உயிருக்கும் ஆபத்து வந்தது.

புகழேந்தி:- உம் உயிருக்காக மட்டும் இவ்வளவு வருத்தப்படுகிறீரே. இந்தச் சிறையிலுள்ள மற்றவர்கள் உயிரைவிட உங்கள் உயிர் மட்டும் உயர்ந்ததா என்ன?

விகடகவி:- உமக்கென்ன தெரியும் என் உயிரின் பெருமை! எனக்கல்லவா தெரியும் (தனக்குள்) தலைதப்புவதே தம்பிரான் புண்ணியமாயிருக்கும் போது தாராள சிந்தனை வேறா வேண்டும்?

குயவன்:- புலவர் சிகாமணியே! தங்களைக் காணவேண்டுமென்றிருந்த எங்கள் நெடுநாளைய ஆவல் இன்று தான் நிறைவேறியது. நாங்கள் சிறையிடப் பெற்றதும் நன்மைக்கென்றே நினைக்கின்றோம்.

தட்டான்:- புலவர் தலைவ! இந்த ஒட்டக்கூத்தனின் கொட்டம் அடங்கத் தாங்கள்தான் ஒரு வழிசெய்ய வேண்டும். குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு போல் இவர் புலவரினத்தையே அழித்துவிடுவார் போலிருக்கிறது சோழ நாட்டில்.

விகடகவி:- (தனக்குள் ஆமாம் கற் கோட்டையிலிருந்து, மனக்கோட்டை கட்டவேண்டியதுதான்.

புகழேந்தி:- புலவர்களே! மரணத்தைக் கண்டு மருளாதீர்கள். தைரியத்தை இழக்காதீர்கள். மனிதன் இறப்பது ஒரே முறைதான். விஜயதசமி விழா இன்னும் எத்தனைநாள் இருக்கின்றது?

கருமான்:- இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன.