பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கலைவாணன்

புகழேந்தி:- ஆமாம் அதுவே போதும் அதற்குள் உங்கள் எல்லோரையும் யார் எத்தகைய கேள்விகள் கேட்டாலும் தயக்கமின்றித் தைரியத்துடன் பதில் சொல்லும் பாண்டித்யமுடையவர்களாகச் செய்து விடுகிறேன். இவ்வாண்டு நவராத்திரி விழாவில் எல்லோர் முன்னிலையிலும், கூத்தர் உங்களால் அவமான மடைவார். அத்துடன் அவர் கொட்டமும் அடங்கிவிடும். என்ன சொல்கிறீர்கள்?

குயவன்:- குருடன் வேண்டுவது கண்ணைத்தானே! எப்படியும் கூத்தரின் செருக்கு அடங்கினால் சரிதான். மேலும் தங்கள் மாணாக்கர்களாய் இருக்க நாங்கள் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டாமா?

விகடகவி:- ஊஹூம்; எனக்கு நம்பிக்கையில்லை. கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்க நினைப்பது போல் இருக்கிறது இந்த யோசனை.

புகழேந்தி:- பயப்படாதீர். நீர் இறந்து விடமாட்டீர்

விகடகவி:- நான் இறந்தால்! நீங்கள்மட்டும் என்னவாம்?

புகழேந்தி:- நீங்கள் யாவரும் நாளையிலிருந்து இலக்கணம் தொல்காப்பியம் முதலிய பாடங்களைச் சரிவரப் பயில வேண்டும்.

எல்லோரும்:- தங்கள் உத்திரவுப்படியே ஆகட்டும்.

விகடகவி:- சிறைச்சாலையைப் பள்ளிக்கூடமாகச் செய்து விடப் போகிறீர்களா? நல்ல யோசனை தான். நீங்கள் ஆசிரியர்; அவர்கள் மாணவர்கள். எப்படியோ உங்கள் பொழுது கழிந்துவிடும். நானென்ன செய்வது? நான் சும்மா இருந்தாலும் என் வயிறு சும்மா யிராதே!