பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

71

புகழேந்தி:- செவிக்குணவில்லாதப்போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும் என்றபடி, பகற்பொழு தெல்லாம் இலக்கியப் பயிற்சியிற் கழித்து மாலையில் வழக்கப்படி சிறைக் காவலர்களால் கொடுக்கப்படும் சிறிது கூழை யருந்திப் பொழுதைக் கழிக்கவேண்டியதுதான்.

விகடகவி:- நல்ல வேலையாய்ப் போச்சு. இந்த வாய்ப் பேச்சு வேதாந்தங்கள் நமக்குப் பிடிக்காதையா, பிடிக்காது. நாள் ஒன்றுக்கு ஆழாக்குக் கூழைக் குடித்துக்கொண்டு மனிதன் எத்தனை நாளைக்கையா இருக்க முடியும்?

புகழேந்தி:- நாம் மாத்திரமா இருக்கிறோம்? நம்மைப்போல் இன்னும் எத்தனை புலவர்கள் இந்தச் சிறையில் கஷ்டப் படுகிறார்கள். அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள் தானே?

விகடகவி:- ஐயா புலவரே! நான் சாப்பாட்டுராமன் என்பது உமக்குத் தெரியும். இந்தச் சமாதானமெல்லாம் எனக்கு வேண்டாம். அண்டம் புரண்டாலும் சரி, சூரிய சந்திரர் திசைமாறினாலும் சரி, கவலையில்லை. எனக்கு வேண்டியது வேளா வேளைக்குத் திருப்தியாய் குறைவில்லாமல் ருசியான சாப்பாடுதான். அதற்கும்வழி யில்லையென்றால், ஒருநாளைக்குக்கூட என்னால் இந்த இருட்டறையிலிருந்து காலம் தள்ள முடியாது. இதோ பார்த்தீரா இந்தத்துணியை முறுக்கிக் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு சிவசிவாவென்று தொங்கிவிடுவேன்.

புகழேந்தி:- அடடா!—இதேது! உம்மோடு பெரிய தொல்லையாகவல்லவா இருக்கிறது! ஏனையா, சிறைச்சாலையில் உமக்கு மட்டும் வேளா வேளைக்குத் திருப்தியாய்க் குறையில்லாமல் ருசியான சாப்பாடு வேண்டுமென்றால் என்ன செய்வது?