பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி–14.

இடம்-ஆற்றங்கரை.

காலம்:–பகல்

(நகரப் பெண்கள் பலர் குளிப்பதும் தண்ணீரெடுத்துப் போவதுமாக இருக்கின்றனர்.)

கமலம்:- ஏண்டீ! சாவித்திரி, நீங்கள்ளாம் வெகு நேரத்துக்கு முன்னேயே வந்திங்களே! இந்நேரம் என்ன பண்ணீங்க! காவேரி விடமாட்டேங்கறதா என்ன!

சாவித்ரி:- இந்நேரம் சிறையிலே கதை கேட்டுட்டு இப்பத்தானே வந்தோம்.

கமலம்:- அதென்னடி சிறைச்சாலையிலே கதை! கதையின்னா எங்கேயாவது கோவில்லே, மடத்துலே நடக்கும்னு பேரு நீங்க என்னடீன்னா! சிறையிலே கதை கேட்டேங்குறீங்களே!

கோமளம்:- அடி சாவித்திரி, அவளுக்கு விஷயம் தெரியாது போலிருக்கு. முன்னாடியே சொல்லியிருந்தா அவளும் வந்திருப்பாள்.

அலமேலு:- சரிதான். வேறெ வெனையே வேண்டாம் சும்மா இருக்கும்போதே அவமாமியார், ஆயிரம் குத்தப் பத்திரிக்கை வாசிப்பாள். இன்னும் அவ கதை வேறே கேக்க வந்துட்டான்னா...போதும்.

சாவித்ரி:- அதிலேயும் நம்மோடு சேர்ந்து வந்தான்னு தெரிஞ்சா......?

கோமளம்:- இன்னம் ரொம்பநல்லாயிருக்கும். வெறும்வாயை மெல்றவளுக்கு ஒரு பிடி அவலுங் கிடைச்ச மாதிரிதான்.