பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி—15

இடம்:- சிறைக்கூடவீதி

காலம்:-பகல்

(நகரெங்கும் அலங்கரித்திருக்கிறது. புலிக்கொடிகள், திரிவட்டம், பூச்சக்கரக் குடை முதலியவற்றைத் தூக்கியபடி கணக்கற்ற ஏவலாளர்களும் பொது மக்களும் மன்னனையும் நாட்டையும் வாழ்த்திக் கோஷமிடுகின்றனர். வாளும், வேலும், வில்லும் தரித்த ஆயிரக்கணக்கான வீரர்கள் புரவிகளின் மீதும் யானைகளின் மீதும் முன்னும் பின்னும் தொடர்ந்துவர, அரசன் குலோத்துங்கன் பவனி வருவதை ஆங்கு சிறைக்கூடத்திலிருந்த புகழேந்தி முதலிய புலவர்களும் காணுகின்றனர். புகழேந்தியைக்கண்ட அரசன் விசனிக்கிறான்

குலோத்:- கூத்தர்பெரும! இன்று குதூகலத்துடன் பவனி வரும் நம்மைக் கண்டு, நாளை துர்க்கையின் பலிபீடத்தில் உயிர்விடப்போகும் புவவர்களின் மனம் எவ்வளவு வேதனை அடையும்?

கூத்தர்:- ஆம், ஆம்; இவர்கள் மனவேதனைப்பட வேண்டியது தான். புலவரென்ற பெயரைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்டு பலரை ஏமாற்றிப் பிழைக்கும் இவர்கள் மனம் வேதனையடைய வேண்டியது நியாயம்தானே!

குலோத்:- என்ன இருந்தாலும் புலவர்கள் விஷயத்தில் நாம் அதிகக் கொடுமையாகத்தான் நடந்து கொள்கிறோம். தமிழார்வத்தால் புலவரென்று வெளிவரும் இவர்களையெல்லாம் வருத்திக் கொல்வதைவிட அவர்களின் ஆர்வம் வீணாகாதபடி தக்க பயிற்சியளித்தால் தமிழ் நாட்டில் எத்தனை உயர்ந்த புலவர்களைக் காணலாம். இதனால் தமிழ்க் கலையும் முன்னேற்றம் அடையுமல்லவா!