பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

77

கூத்தர்:- அரசே தாங்கள் நினைப்பது தவறு. நாய்வாலை நிமிர்த்தாலும் நிமிர்த்தலாம். இவர்களைத் திருத்த முடியாது. இவர்கள் அனைவரும் மடையர்கள். இவர்களால் புலவன் என்ற சொல்லுக்கே இழிவுண்டாகிவிடும். இவர்களிடம் கருணை காட்டவே கூடாது. வழக்கப்படி இவர்களைத் தலையோடு தலையாகப் பிணைத்து இரட்டைக் கடாக்களாகப் பலியிட வேண்டியது அவசியமே.

குலோத்:- என்ன எல்லோரையுமா அப்படிச் சொல்லுகிறீர்கள்? புகழேந்தி மகாகவியல்லவா? நம் நியதியின்படி புகழேந்தியையும் கொன்று விட்டால், நமக்கும் நாட்டிற்கும் பெரிய நஷ்டமல்லவா! மேலும் ஒரு ஒப்பற்ற தமிழ்ப் புலவரை குலோத்துங்கன் கொன்றான் என்ற பழிச் சொல் என்றும் நீங்காதல்லவா!

கூத்தர்:- அரசே! நீங்கள் யாரை மகாகவியென்று சொல்லுகிறீர்கள்? எனக்கு முன் நிற்கவும் தகுதியற்ற இந்தப் பதரையா?

(பாட்டு)

“மான்னிற்குமோ இந்த வாளரிவேங்கை முன் வற்றிச் செத்த கான்னிற்குமோ இவ்வெரியுந் தழலின்முன் கனைகடலின்
மீன்னிற்குமோ இந்தவெங்கட்சுறவமுன் வீசுபனி
தான்னிற்குமோ இக்கதிரோனுதயத்தில் தார் மன்னனே”

[சிறைக்கூடத்தில் இருந்து இப், பாடலைக் கேட்ட புகழேந்தி அலட்சியமும் ரெளத்திரமும் தொனிக்க நகைக்கிறார்]

புகழேந்தி:- அரசே! இப்பாடலை வெட்டிப் பாடவோ? அல்லது ஒட்டிப் பாடவோ?

குலோத்:- ஒட்டியே பாடுங்கள். பார்ப்போம்.

புகழேந்தி:- பாடுகிறேன்.