பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


திகைப்பது மருட்கைச் சுவைக்கும், விகடகவியின் பேச்சு நகைச் சுவைக்கும் ஏற்ற இடங்களாக அமைந்துள்ளன.

கதை மாந்தர் படைப்பு

நாடகத்தின் வெற்றி அதன் கதை மாந்தர்களைப் படைக்கும் திறத்தைப் பொருத்ததேயாம். ‘கலைவாணன்’ என்னும் இந்நாடகத்தில் உள்ள கதை மாந்தர்களின் பண்புகளும் செயல்களும் நாம் நாள்தோறும் வாழ்க்கையில் கண்டு வருபவைகளே. கதை மாந்தர்களைப் பொருத்தமாகவும், வேண்டிய அளவிலும் படைத்ததன் வாயிலாக சிறந்த நாடகாசிரியர் எனும் நிலையை இந்நூலாசிரியர் பெறுகிறார். இந்நாடகத்தின் மாந்தர்கள் அனைவரும் மனித இயல்புகளை உணர்த்தும் வகையில் படைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

தலைவன், தலைவி, முரணர் என்பார் கதையின் தலைமைமாந்தர்களெனவும், இவர்களுடைய செயலுக்குத் துணை நின்று கதை வளரக் காரணமாயிருப்போர் துணை மாந்தர்கள் எனவும் அழைக்கப்படுவர். இக்கதையின் தலைவனாகப் புகழேந்திப் புலவர் படைக்கப்பட்டுள்ளார். பொதுவாகத் தலைவன், தலைவியர் சிறந்த பண்புகளைப் பெற்றவர்களாகப் படைக்கப் பெறுகின்றனர். தீய பண்புகளைக் கொண்டவர்களாகவும் முதன்மைக் கதை மாந்தருடன் மாறுபடுவதன் வாயிலாக நாடகச் செயலோட்டத்தை ஊக்குவிக்கும் சக்திகளாகவும் முரணர்கள் (villains) விளங்குவர். அவ்வகையில் இந்நாடகத்தில் ‘முரணனாக’ விளங்குபவர் ஒட்டக்கூத்தரே! முரணர்கள் திருந்தாமலேயே அழிவது பெரும்பான்மை நாடகங்களில் காணப்படும். இந்நாடகத்திலோ கூத்தர் முதலில் முரணராக இருந்தபோதிலும் இறுதியில் மனந் திருந்தி நாடகத்தலைவன் நிலைக்கு உயர்ந்து விடுகிறார்! பாண்டிய மன்னன், குலோத்துங்கன், பாண்டிய மன்னன் மகள் ஆகியோர் தலைமை மாந்தர்கள் நிலையில் விளங்குகின்ற முக்கியத் துணை மாந்தர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். துணை மாந்தர்களும் தலைமை மாந்தரையொப்பப் படைக்கப்பட்டிருப்பதும், முரணர் கதைத் தலைவராகும் நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பதும் இந்நாடகக் கதை மாந்தர் படைப்புகளின் தனிச் சிறப்புகளாகும்.