பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபத்து! அவனே தன் தமையனாரின் மகளைக் கெடுத்தவன் என்று தீர்மானித்து, அவனை வேலையைவிட்டு நீக்கியதோடு திருப்திகொள்ளாமல், அவனை ஆள்வைத்துக் கொன்று உலகத்தைவிட்டே நீக்கி விடுகிறார். அகல்யாவைக் கெடுத்தவனோ இந்திரன்! ஆனால், ஆள் மாறாட்டம் உம்மைப் பழவினையின் உருவத்தில் வந்து சிரிக்கிறது. பாலும் பாவையும் கெட்டுவிட்டால் பயனில்லை என்ற சமுதாயத் தத்துவம் சமையற்காரன் மூலம் அவள் காதுகளில் ஒலிக்கிறது. உடனே அவளது கண்கள் திறக்கின்றன. எளிய முறையிலே அவளைச் சாகடித்து விட்டீர்கள். எழுத்தாளர்களின் தலைவலியை மிக எளிதில் போக்கவல்லது ஆயிற்றே ஆழி? “செத்துத்தான் சமூகத்தின் அனுதாபத்தைப் பெறவேண்டுமானல் அந்தப் பாழும் அனுதாபம் எனக்கு வேண்டவே வேண்டாம்!” என்று வீரம் பொழிந்த அகல்யாவை நீங்கள் ஏன் அவ்வளவு துரிதப்பட்டுக் கொன்று போட்டீர்கள்? உங்களுக்குக்கூட அவள்பால் இரக்கம் பிறக்கவில்லையா? “நான் உன்னைக் காதலிக்காமல் கொல்லுவதைவிடக் காதலித்தே கொன்றுவிடலாமென்று நினைக்கிறேன்!” என்று உங்கள் கனகலிங்கத்தைப் பேச வைத்தீர்களே, அதன் நிமித்தம்தான் அவளுக்கு வாழ்விலிருந்து ‘விடை’ கொடுத்தீர்களா?

என் ஆழ்ந்த அனுதாபங்கள் அகல்யாவுக்கு உரியனவாகுக. ஏன் தெரியுமா? அவள் செத்துப் போனாளே என்பதற்காகவா?-அன்று. அவள் அருமை மிகுந்த இந்தத் தமிழ் மண்ணில் பிறந்தாளே என்பதற்காக!

“ஒரு காலத்தில் சொர்க்கத்திற்கு இருந்த மதிப்பு காதலுக்கு இருக்கிறது. இரண்டும் கற்பனையே என்றாலும், காதலைக் கைவிட நம்மால் முடிவதில்லை!”

132