பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெயரால் சாக விரும்பாதவளென நீங்கள் வரம்பு வகுத்து, இறுதியில் தெய்வத்துக்குப் பதிலாக நீங்களே ‘சூத்திரதாரி’யாக ‘ஆக்ட்’ பண்ணி அவளைக் கொன்றிருக்கிறீர்கள்! பாவம், அகல்யா!

“எல்லாவற்றையும் வேடிக்கையாகக் கருதுவதால் தான் என்னால் உயிர் வாழ முடிகிறது,” என்கிறான் கனகலிங்கம். காதலினால் சாண்வயிற்றைத் திருப்திப்படுத்த முடியாதென்று இந்திரனால் பாடம் படித்துக்கொடுக்கப் பட்ட அகல்யாவின் கதையைக் கேட்ட பிறகே அவன் இவ்வாறு சொல்கிறான். நெருங்கி வந்தவளிட மிருந்து விலகும் கனகலிங்கம், ‘வேண்டாம்! பசி தீர்ந்துவிட்டால், நானும் இந்திரனைப்போல் ஓட்டம் பிடித்தலும் பிடித்துவிடுவேன்!” என்றும் அறிவிக்கிறான். அவள் ஒட்டி ஒட்டி வரும்போது, அவனோ எட்டி எட்டிப் போகிறான். சிறு சலசலப்பு. ‘ஐயோ, பாவம்! உலகம் தெரியாத அபலை. அவள் காதலை உண்மையென்று நம்பினாள். அந்தக் காதலுக்காகத் தன்னை ஒருவனுக்கு அர்ப்பணித்தாள். அவன் அவளைக் கைவிட்டான். அதற்காக அவள் செத்துப்போக விரும்பவில்லை. வாழ விரும்புகிறாள். ஆண்களுக்கு மட்டும் அந்த உரிமையை அளிக்கும் சமூகம் பெண்களுக்கு அளிக்க மறுக்கிறது —இது அக்கிரமந்தானே?’ என்ற கணநேர மெளனச் சிந்தனை அவனது தயாள சிந்தையின் கதவுகளைத் திறந்து விடுகிறது. “அகல்யா, அகல்யா’ நான் உன்னுடைய மனத்தைப் புண்படுத்திவிட்டேனா? என்ன? சொல்லு, அகல்யாசொல்லு!” என்று அவன் குழைகிறான் இந்நிலை சலனத்தின் விளைவா? அன்புப்பண்பின் பணியா?

136