பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவன் பெங்களூர் மாப்பிள்ளை. பெண்பார்க்க வரும் உளவு அறிந்து துடிக்கிறான் ஒருவன். அவனுக்குப் பெயர்: ‘டைகர்’. விலங்கல்ல; அசல் பகுத்தறிவு மனிதனே! டைகருக்கு முறைமைப் பெண் சிந்தாமணி. தான் மணம் நுகர வேண்டிய மலர் மாற்றானுக்கு உடந்தையாவதா என்று கொதிக்கிறான். சதி உருவாகிறது. ‘ஈரப் புடவையில் விளைந்த புதிய அழகுடன்’ குளத்தினின்றும் வெளியேறும் சிந்தாமணி டைகரின் கல்வீச்சுக்கு இலக்காகிறாள். துடிக்கிறாள். மருத்துவமனையில் டாக்டர் ஆனந்தி புகலளிக்கின்றாள். அவளும் தனக்கு அடைக்கலம் நல்க வேண்டுமென மனப்பால் குடிக்கிறான் டைகர். மாற்றான் தோட்டத்து மல்லிகையாகப் போகிற செய்தி அறிந்ததும், சிந்தாமணியின் வாழ்வில் விளையாடுகிறான் டைகர். சிந்தாமணி கள்ள வழியில் கருவுற்று மகவைப் பெற்றிருக்கிறாள் என்னும் பழி ஆனந்தியின் துணையினால் கிளப்பிவிடப் படுகிறது. மாப்பிள்ளை அழகப்பனும் மாப்பிள்ளைத் தோழன் நயினாவும் அதிர்ச்சியடைகிறார்கள். இடைவழியில் டாக்டர் ஆனந்தி, அவர்களது காரில் மோதி விழுகின்றாள். அவள் மீது மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனுக்கும் மையல். அந்தத் தையல்: சாறு சுவைக்கப்பட்ட நீலம். ஆக, விளைவு: மும்முனைப் போராட்டம். உதிரிச் சூழ்ச்சிகள் தலைவிரித்தாடுகின்றன. தான் ஒரு மாசற்ற மணிவிளக்கென உலகுக்கு உணர்த்த வேண்டுமென்று முடிவு செய்கிறாள் சிந்தாமணி. கனவு பலிக்கிறது. வாழ்வின் தொடக்கம் அழகப்பனின் கைத்தலத்தில் இணைய வேண்டிய நேரத்தில், அவன் அவளிடம் ஓடிவந்து மன்னிப்புக்கோரும் பரிபக்குவ நிலையில், ‘விதி’-தவறு, கதை விளையாடுகிறது. உம்மைவினை-அன்று, பகுத்தறிவு ‘சடுகுடு’ ஆடுகிறது!

147