பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கம்பராமாயணத்தின் பன்முகச் சிறப்புகள் இவ்வாறு உலகம் யாவையும் என்று தனது மாபெரும் காவியத்தைத் தொடங்கும் கம்பன் ஒரு மாபெரும் புலவன் உலகப் பெரும் புலவர்களின் முன்னணியில் முதல் வரிசையில் நிற்பவர். அவர் இயற்றியுள்ள கம்பராமாயணம் ஒரு மாபெரும் காவியம் உலகப் பேரிலக்கியங்களின் முதல் வரிசையில் உள்ள பெருங்காவியம். அந்த மாபெரும் காவியத்தின் சிறப்புகள் பன்முகத் தன்மை கொண்டதாகும். கம்பால் தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் இராமாயணப் பெருங் காவியத்திற்கும் பெருமை ஏற்பட்டிருக்கிறது. கம்பராமாயணப் பெருங்காவியத்தால் கம்பனுக்கும் தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டிற்கும் பெரும் பெருமை ஏற்பட்டிருக்கிறது. வால்மிகி இராமாயணத்தில் இராமன் சிறந்த மனிதன், சிறந்த ராஜகுமாரன், மிகச் சிறந்த ஒழுக்கங்களையும், பண்புகளையும், நற்குணங்களையும், நற்செயல்களையும், கொண்ட மாவீரன். வீரம் வில்லாற்றல், விவேகம் நிறைந்த சிறந்த வீரன். மனிதகுலத்திற்கு முன்னுதாரணமானவன். அத்தகைய கல்யாண குணங்களையும் சிறப்புகளையும் கொண்டவன். அதனால் அந்த பேராற்றல் கொண்ட பெருமான் கல்யாணராமன் என்று அழைக்கப்படுகிறான். கம்பராமாயணத்தில் இராமன் சிறந்த மனிதன் மட்டுமல்ல, அவர் திருமாலின் அவதாரம், திருமாலின் பூரணாவதாரம், இப்பூமி யில் பிறந்து வளர்ந்து அத்தனை பயிற்சிகளையும் பெற்ற பலரையும் ஒன்று திரட்டி அணி சேர்த்துத் தனது மகத்தான அவதாரக் கடமையை நிறைவேற்றும் மாவீரன். அந்த மாமனிதனுக்கு, அத்தனை பண்புகளையும் கல்யாண குணங்களையும் கொண்ட மாமனிதனுக்கு, அவன் தனது அவதாரக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பலரும் துணை நிற்கிறார்கள் ஒத்துழைக்கிறார்கள்.