பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னிசைப் பாமாலை

29


வேல்சோர வோடரிக்கண்
மெல்லிநல்லார் வேட்கையினைப்
பால்சோர நின்றீர்த்த
பாசவலைப் பட்டொரீஇ
மேல்சோரக் கைசோர
மெய்சோர வாய்சோரக்
கால்சோர நின்றிருந்தேன்
கல்வத்து நாயகமே!


உண்ணுவதுந் தூங்குவது
மோய்ந்தெழுந்து மற்றையநாட்
கெண்ணுவதும் வேலையென
வெண்ணுநர்க்கா ளாகாமல்
பண்ணுவது நும்பூசை
பாடுவது நுங்கீர்த்தி
கண்ணுவது நும்மருளாங்
கல்வத்து நாயகமே!


சூதிட்ட வைம்புலனுஞ்
சூழ்ந்தகுண மாறுமொன்றாய்
வாதிட்டுத் தாழ்த்துமெனை
வம்பனெனத் தள்ளாமல்
ஏதிட்ட நும்மடிக்கீ
ழேய்ந்திருந்து போற்றுமுசை
காதிட்டுக் கேளீரோ
கல்வத்து நாயகமே!