பக்கம்:கல்விச் செல்வம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

43



நிறையுளம் கருதி நிகழ்ந்தவை நிகழ்பவை
தருதலின் வானத் தருஐந்து ஆகியும்
மறைவெளிப் படுத்தலின் கலைமகள் இருத்தலின்
அகமலர் வாழ்தலின் பிரமன் ஆகியும்
உயிர்பரிந்து அளித்தலின் புலமிசை போக்கலின்
படிமுழுது அளந்த நெடியோன் ஆகியும்
இறுதியில் சலியாது இருத்தலானும்
மறுமை தந்து உதவும் இருமையானும்.
பெண்ணிடம் கலந்த புண்ணியன் ஆகியும்.
அருள்வழி காட்டலின் இருவழியாகியும்
கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின்
நிறையுளம் நீங்கா குறையருள் ஆகியும்
அவைமுத லாகி இருவினை கெடுக்கும்
புண்ணியக் கல்வி:

தருமதீபிகை

காட்சி புரிந்தருளும் காமர் விழிபோல
மாட்சி புரிந்து மனுக்குலத்தை-ஆட்சியாப்
பல்வழியும் ஊக்கிப் பயன்காட்டி நிற்றலால்
கல்வியும் செல்வமும் கண்.

செல்வம் வழிமுறையில் சேர்ந்துவரும் கல்வியோ
புல்லிப் பயின்றோர்க்கே போதுமால்-ஒல்லையினில்
ஒதி உயர்க ஒழித்தாயேல் நீ என்றும்
பேதையாய் நிற்பாய் பிறழ்ந்து.

வாய்பேசும் மாட்சியினால் மக்களுயர்ந் தார்விலங்கோ
வாய்பேச மாட்டா வகையிழிந்த-ஆய்வகையில்
கல்லாமல் சொல்லளவில் காணுமகன் பேசுகின்ற
பொல்லா மிருகம் புரை.

கல்லாதான் கல்லாய்க் சழிந்திழிந்தான்; கற்றவனோ
எல்லொளி வீசி எழில் மிகுந்து-நல்ல
மணியாய் உயர்ந்தான்; மதிகெட்டு நின்றார்
பிணியாய் இழிந்தார் பிறழ்ந்து.