பக்கம்:கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

போது உறுப்பினர்கள் பலர் உறங்காமல் இருந்தார்கள், எடுத்துக்காட்டாக இராமனாதபுரம் ஜில்லாவிலிருந்து கம்பம்வரை பாதை வேண்டுமென்று சொன்னால் இதையாருக்கு காண்ட்ராக்ட் விடுவதற்காக மந்திரி இதைச் சொல்லுகிறார் என்று பக்கத்தில் இருக்கும் நண்பரைத் தட்டிக் கேட்கும் நிலையில் எங்கள் பாராளுமன்றம் இருக்கிறது இங்கே நடந்த பாராளு மன்றத்தில் நாட்டின் நலிவைப் போக்குவதற்கான கேள்விகளைக் கேட்டார்கள். இங்கு கேட்கப்பட்டதைப் போன்ற பயனுள்ள கேள்விகள் அங்கு இருக்காது. எங்கள் நாட்டிலே நடைபெறும் பாராளு மன்றத்தில் பெரும்பாலும் கேள்விகள் இருப்பதேயில்லை. அப்படி கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் சொல்லுவதற்கு மந்திரிகளும் இருப்பதில்லை. எங்கள் பாராளுமன்றத்திலே அமைச்சர்கள் இல்லாத புகார், பாராளுமன்றம் நடக்கிற நேரத்திலே உறுப்பினர்கள் கடைவீதியிலே உலாவுகிற புகார் ஆகியவற்றைக் கேட்கலாம்.

மந்திரிகளில் பெரும்பாலோர் நல்ல பிரச்னைகளை ஏற்று நடத்துவதில்லை. "நம்மாலாவதென்ன நமச்சிவாயமே" என்ற அசிரத்தை இல்லாமல் அக்கரையோடு நீங்கள் நடத்துகின்ற பாராளுமன்றத்தை எங்கள் நாட்டிலே உள்ள சட்டசபை உறுப்பினர்களுக்குக்காட்ட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டு. அப்படி உங்களை அழைத்து நான் காட்டினால் அது எங்கள் நாட்டிலே ராஜத்துரோகக் குற்றமாகப் பாவிக்கப்படும். சமயம் வாய்க்கும் பொழுது உங்களைப் போன்றவர்களைக்கொண்டு பாராளுமன்றம் நடத்தும் விதங்களை எடுத்துக்கூற வேண்டுமெனச் சொல்லி இந்த அளவோடு என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.

———~~°✽°~~———