பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

93


எனவே, உணர்ச்சிகள், துடிப்புகள், பூத உடல்நிலை, எதிர் வினை ஆகியவை அனைத்தும் உள்ளக்கிளர்ச்சியினுள் அடங்கும் என்றாகின்றது. திடீரென்று எழும் வெடிப்பு நிலைகளில் மட்டிலும் உள்ளக்கிளர்ச்சி தோன்றும் என்று கருதுதல் தவறு; அது நம் சிந்தனைகள், செயல்கள் முதலிய அனைத்தையும் பற்பல அளவுகளில் அடக்கியாளுகின்றது. உள்ளக்கிளர்ச்சி களைப்பற்றி ஐந்தாம் இயலில் விளக்கப் பெற்றுள்ளது; ஆண்டுக் கண்டு கொள்க.

முதலில் தோன்றும் எதிர்வினைகள்[1]: வாழ்க்கையின் தொடக்கத்தில் குழந்தை அழுது காலையும் கையையும் அடித்து உள்ளக்கிளர்ச்சி வாய்ந்த செயல்களை இயற்றுகின்றது. ஏனைய நடத்தைக் கூறுகளில் தோன்றுவதைப்போலவே, உள்ளக் கிளர்ச்சியிலும் தனிப்பட்ட வெகுளி, அச்சம், மகிழ்ச்சி, துயரம் போன்ற வேற்றுமைகளை உணர்த்தும் எதிர்வினைகள் தோன்றுவதில்லை. முதலில் தோன்றும் எதிர்வினைகள் பொதுத் துடிப்புகளாகவே தோன்றுகின்றன. நாளடைவில்தான் மேற் குறிப்பிட்ட பாகுபாடுகள் தெளிவுறுகின்றன.

குழந்தையின் ஆற்றல்கள் முற்றமுற்ற, அதனது பட்டறிவு மிகமிக, உள்ளக்கிளர்ச்சிகளைத் தூண்டும் ஏதுக்களில் மாறுபாடுகள் நிகழ்கின்றன. முதலில் நேராகத் தாக்கும் தூண்டல்களே உள்ளக்கிளர்ச்சிகளை எழுப்பும். [எ.டு.] பேரொலி, மின்னல், முகத்தில் வேகமாகக் காற்று தாக்குதல், திடீரென ஆதரவை இழத்தல் போன்றவை அச்சத்தை விளைவிக்கும். உரிய காலத்தில் பால் கொடுக்கப்பெறாமை, தானாக எழும் கைகால்களின் இயக்கங்களுக்குத்தடை போன்றவை சினத்தை உண்டாக்கும். வாழ்க்கைத் தேவைகள் நிறைவேறுதலும், மனநிறைவு தரும் இயக்கங்களும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றன.

முதலாண்டில் உள்ளக்கிளர்ச்சி வெளிப்பாட்டில் ஏற்படும் மாற்றம்: குழந்தை பிறந்து சில திங்கள்களில் தோன்றும் சிறப்பான வெளிப்பாடொன்று ஆள்முகத்தைக் கண்டு முறுவலித்தல் ஆகும். இன்னும் சிறிது காலத்தில் முகத்தில் நகை தோன்றுகிறது. நான்கு வாரங்களில் பசி, வெகுளி, வலி என்பவற்றிற்கு வெவ்வேறு வகையான அழுகை தோன்றுகிறதென்று கெசல்[2] 9 என்ற உளவியலறிஞர் கண்டறிந்துள்ளார். இந்த அழுகைப் பண்பு குழந்தைக்குக் குழந்தை வேறுபடும். எனவே, தன்


  1. எதிர்வினைகள்- Reactions
  2. கெசல்-Gesal