பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

கல்வி உளவியல் கோட்பாடுகள்


சேர்ந்து தணித்தனியாகவே விளையாட முற்படுகின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.

தொடக்கநிலைப் பள்ளிகளின் முதலாண்டிலும் இடையாண்டுகளிலும் இத்தகைய பிரிவு நன்கு தோன்றுகின்றது. ஆயினும், குமரப் பருவம் நெருங்குங்கால் இருபாலாரும் இரு திறத்தினரையும் ஒன்றாகக் கூட்டும் செயல்களை நாடுகின்றனர். இந்த எதிர்ப்பால் கவர்ச்சிப் பெருக்கம் பையன்களைவிடப் பெண்பிள்ளைகளுக்கே முன்னதாக ஏற்படுகின்றது. பெண் பிள்ளைகள் பையன்களுக்கு ஏறத்தாழ ஒன்றரையாண்டுகட்கு முன்னரே கவர்ச்சியில் வளர்கின்றனர். பையன்களுக்குள்ளே, இம் மாறுதல்கள் தோன்றுவதில் நான்கு யாண்டுகள் வரைக்கும் வேற்றுமை காணப்பெறலாம்.

மூத்தோர்களுக்கு: மூத்தோர்களாகிய ஆசிரியர், பெற்றோர் இவர்களின் முக்கிய குறிப்பினை இவண் குறித்தல் வேண்டும். குடும்பத்திலாயினும் சரி, பள்ளியிலாயினும் சரி, குழந்தைகள் ஒரு தலை ஆதரவு[1] காட்டலாகாது; தனிச்செல்லம் காட்டலாகாது; தம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு காட்டலாகாது. ஆசிரியரும் பெற்றோரும் சில சமயங்களில் அவர்கள் அனுமதியாத செயல்களைப் பிறரிடம் செய்கின்றனர். என்பதைக் சிறுவர்கள் அறிகின்றனர். சரியான சமூகப்பண்பு வளர்ச்சிக்கு இவை ஏற்றன அல்ல.

ஏறக்குறைய 12 வயதில் குமரப்பருவம் தலைகாட்டுகின்றது. இப்பருவத்தில் சமூகப்பண்பு வளர்ச்சி சிறந்தோங்கும். இப்பொழுது பிறர் உரிமையறிதல், எதிர்பாலில் கவர்ச்சி, சமூகத்தொண்டு போன்றவை தனித்து விளங்குவதைக் காணலாம். இப்பருவத்தில் விளையாட்டுகள், விழாக்கள், குழுக்கள், கழகங்கள், சுற்றுலாக்கள், சாரணர்படை போன்றவை தன்னலம் கருதாது குழுக்கிளர்ச்சியை[2] உண்டாக்கிப் பரந்த நோக்கத்தை வளர்க்கின்றன. நாட்டுப் பற்று, அனைத்து நாட்டுப்பற்று என்றவை நாளடைவில் தோன்றுகிறது.

தலைமைப் பண்பை வளர்த்தல்: இளைஞர்களைத் தகுந்த தலைவர்களாக பழக்கும் நோக்கத்தையும் கல்வி நிறைவேற்ற வேண்டும். தலைமைக்கு உடல்கவர்ச்சி, உடல்நலம் முக்கியமானவை. முக்கியமாகக் குறிப்பிட்ட துறையில் திறமை, இருத்தல்வேண்டும். தோழமை, பகைமை ஏற்படுத்திக்


  1. ஒரு தலை ஆதரவு-Favoritisms.
  2. குழுக்கிளர்ச்சியை-Esprit-de-corps.