பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

கல்வி உளவியல் கோட்பாடுகள்


தலும் அவனுக்கு விளங்குகின்றன. காலம் சொல்வான்; ஒரு திங்கள் கூடச் சொல்வான். ஒவ்வொரு இடங்களுக்குச் சென்று பொறுப்பெடுத்துப் பொருள் வாங்கும் திறன் இவ்வயதிலிருந்து பெருகுகின்றது. தனக்கு இடும் பணிகளுக்கு மறுப்பு கூறுகின்றான். ஆண் பெண் வேற்றுமையைப்பற்றிய ஆராய்ச்சியும், குழந்தைகள் எவ்வாறு வளருகின்றன என்ற வினாவும் அவனது உண்மை உணரும் அவாவினைக் காட்டுகின்றன. மூத்தோர்கள் அவன் விடுக்கும் வினாக்களுக்கு உண்மையான விடையளிக்க வேண்டும்.

இதற்கு முன்னர் கவர்ச்சியுற்றதாக இருந்த பாவனை உலகமும் மகிழ்ச்சியளித்த வனதேவதைக் கதைகளும் இப்பொழுது மகிழ்ச்சி தருவதில்லை இப்பொழுது அவற்றைக் கூறினால் அது உண்மையா?' என்று வினவுகின்றான்; சிந்தனையாற்றலும் நினைவும் ஓங்குகின்றன. பயன்படும் பொருள்களைச் செய்வதில் துடிப்பு காணப்படுகின்றது. தக்களி, இராட்டை, கத்திரிக்கோல், மண்வெட்டி, இரம்பம்போன்ற கருவிகளைக் கையாள விரும்புகின்றான். கட்டூக்கம்[1] , திரட்டூக்கம்[2] , பின்பற்றல்[3] போன்றவை சிறந்து விளங்குகின்றன. காரண காரியத் தொடர்பை அறிய விரும்புகின்றான். கவனிக்கும் ஆற்றல் அதிகமாகின்றது; அதிக நேரம் ஒரு பொருளைக் கவனிக்கின்றான்.

பின் பிள்ளைப்பருவம் (8-12) வயது

இப்பருவம் கிட்டத்தட்ட மாறாத நிலையினையுடையது. உடல் வளர்ச்சியில் வேகம் குறைகின்றது. பல் வரிசைகள் திருந்துகின்றன. குளித்தல், தலைவாருதல் போன்ற உடல் தேவைகளுக்கு அதிகக் கவனம் தரப்பெறுகின்றது. பல்வேறு விளையாட்டுகள் விளையாடி பலதிறச் செயல்கள் புரிவதால் நல்ல ஓய்வும் தூக்கமும் இன்றியமையாதவை. அபாயத்தை அசட்டை பண்ணுவதால் அடிக்கடி காயப்படுகின்றான்.

இப் பருவத்தில் மூளை வளரவேண்டிய அளவுக்கு வளர்ந்து விடுகிறது. உடலும் நன்கு வளர்ச்சியுற்று எதையும் பொறுக்கும் ஆற்றல் கைவரப் பெறுகின்றது. நரம்பு இணைப்புகள் நன்கு ஏற்பட்டு, தசைகளில் ஒத்து இயங்குதல் உண்டாகி, எலும்புகளும் வலிவைப் பெறுகின்றன. செரிக்கும் - உறுப்புகள், குருதி


  1. 82. கட்டூக்கம் -instinct of constrution.
  2. 83. திரட்டூக்கம் - isnstinct of collection.
  3. 84, பின்பற்றல் -Imitation.