பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

கல்வி உளவியல் கோட்பாடுகள்


செம்மையாகவும் அமையும். ஆண் பிள்ளைகளின் குரல் 'ஒடிந்து மெல்லிய குரல் வலிய குரலாக மாறுகின்றது; இளைஞன் மெல்லவோ, உரக்கவோ, இனிமையாகவோ பேச இயலவில்லையென்று நினைக்கின்றான். எடையிலோ அளவிலோ மூளை மாறாவிடினும், அமைப்பில் மாறுதல் அடைகின்றது. எண்டோகிரீன் சுரப்பிகள் வேகமாக வேலை செய்யத் தொடங்கி ஆண், பெண் தன்மைகளின் வளர்ச்சிக்கு ஏற்றனவாயுதவுகின்றன. சிறுவனுக்கு மீசை அரும்புகின்றது. சிறுமிக்கு இடைக்கீழ்பகுதி விரிவடைகின்றது; பூப்பும் அடைகின்றாள். சுருக்கமாகக் கூறினால் ஆண்களும் பெண்களும் பக்குவ நிலையை எய்துகின்றனர். காலம், பால் (sex), தட்பவெப்ப நிலை, இனம், வாழ்க்கைச் சூழ்நிலை, பகுத்தறிவு முதலிய பல பகுதிகளைச் சார்ந்து இந்நிலை ஏற்படுகின்றது. பெரும்பாலும் ஆண்பிள்ளைகளைவிடப் பெண்பிள்ளைகளிடையே ஏறக்குறைய இரண்டாண்டுகட்கு முன்னராகவும் திட்டமாகவும் இப்பருவம் தோன்றுகின்றது. சாதாரணமாக நம் நாட்டில் பெண் பிள்ளைகளிடம் 12-ஆம் வயதிலும் ஆண்பிள்ளைகளிடம் 14ஆம் வயதிலும் இந்நிலை தோன்றுகிறது எனலாம்.

அறிவு வளர்ச்சியும் செயல்களும் : இவை இப்பருவத்தில் புதியனவாக ஏற்படுவதில்லை. சிந்தித்தல், சங்கற்பித்தல், கற்பனை செய்தல், கவனித்தல், நினைவுக்குக் கொண்டு வருதல் போன்ற திறன்கள் தொடக்கத்திலிருந்தே காணப்பெறுகின்றன. ஆயினும், இப் பருவத்தில் இவை விரைவாகத் தொழில் புரிகின்றன. காரண காரியம் காணும் திறனும் நன்கு வளர்கின்றது. ஆகவே, புலனுணர்ச்சிகளினால் கருத்தை புணர்வதிலும் சிந்திப்பதிலும் திறமை மிகுதியாகத் தோன்றும். வெற்றுணர்வுத் திறன் அதிகரிக்கின்றது. செவ்வையாகக் சிந்தித்துச் செயல்களில் தோன்றும் பயன்களை எண்ணி நடத்தையை மேற்கொள்வதில் கூர்த்த மதி காணப்பெறலாம். விளையாட்டுகளிலும் நூல்களைப் படிப்பதிலும் மனம் மிகுதியாக ஈடுபடும். கற்பனையாற்றலும் பெருகித் தோன்றும். பகற் கனவுகள் தோன்றலாம். பொறுப்பை ஏற்கும் மனப்பாங்கும் உண்டாகும். சமூகப் பிரச்சினைகளில் மனம் செல்லும், முதிர்ந்தோர் செயல்களில் ஊக்கம் காட்டும் நிலை தோன்றும். எதிர்காலத்தில் தாம் மேற்கொள்ளவிருக்கும் தொழில்களிலும் மன ஆக்கத்தை வெளிப்படுத்துவர்.

இப்பருவத்தில் இளைஞர்கள் உண்மைக் கதைகளையும் துணிகரச் செயல்களைக் கூறும் நூல்களையும் விரும்புவர். புதியன படைத்தல், அறிவியல் இவற்றில் ஊக்கம் காட்டுவர்.