பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

கல்வி உளவியல் கோட்பாடுகள்


உடல்மாறுபாடுகளால் எழும் உளவிளைவுகள் : பெரும்பாலும் இவ்விளைவுகள் உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றியவை. அவை முதிர்ச்சி பெறும் பாலுணர்ச்சியுடன் ஓரளவு தொடர்பு கொண்டவை. இப் பருவத்தில் எழும் உள்ளக் கிளர்ச்சிகள் பெரும்பாலும் உறுதியற்று இருக்கும்; ஆனால், அவை வலியுற்றுக் கிளர்ந்தெழும். மகிழ்ச்சி, பாலுணர்ச்சி, அச்சம், சினம், பொறாமை, பேரவா ஆகிய இவை பொங்கியெழுந்து ஒன்றோ டொன்று மோதும் இயல்பிலும் அளவிலும் இவை குழந்தையுணர்ச்சிகளினின்றும் வேறுபட்டவை. இக் குழப்பமான காலத்தில் பல்வேறு தூண்டல்களால் ஏற்படும் எண்ணங்ளையும் செயல்களையும் மாற்றும் உணர்ச்சி நிலை உறுதியில்லாதது. இளைஞன் ஒரு சமயம் தன்னைக்கண்டு மனநிறைவோடு மகிழ்கின்றான்; மறுசமயம் தீராத் துயரத்தில் மூழ்கியவனாய்க் காணப் பெறுகின்றான். ஒரு சமயம் வீண்பெருமை பாராட்டுகிறான்; உடனே எளிதில் மனத் தளர்ச்சி பெறுகின்றான். ஒரு கணம் அதிகாரப் பிரியனாகக் காணப்பெறுகின்றான்; அடுத்த கணம் மிகத் தாழ்மையுடையவனாகக் காணப்பெறுகின்றான். ஒரு சமயம் ஆக்கிரமிக்கும் இயல்பு மீதூர்ந்து நிற்கின்றது; அடுத்து கோழைத் தன்மை மேலோங்குகின்றது. ஒரு மணித்துளி உல்லாசமாகவும், பிறகு ஊக்கமற்றவனாகவும் ஆகின்றான். ஒருசமயம் விடுதலையுணர்ச்சி மேலோங்கி நிற்கின்றது; அடுத்து முற்றிலும் பிறரைச் சார்ந்தவனாகக் காணப்பெறுகின்றான். ஒரு சமயம் பிறர் நலத்தைப் போற்றுகின்றான்; மறுசமயம், தன்னலம் பேணுகின்றான். மொத்தத்தில் புதிதாய்த்தோன்றும் உணர்ச்சிகளையும் உள்துடிப்புகளையும் அடக்கிப்பொருத்தமுற முடியவில்லை. இந் நிலைமை பல்வேறு வழிகளில் வெளியாகின்றது. இளைஞன் எவ்விதக் கட்டுப்பாட்டையும் மீற விரும்பும் புரட்சிக்காரனாகத் தோன்றுகின்றான்.

இப் பருவத்தில் இனப்பெருக்க உறுப்புகளின் தொழில். விரிவடைகின்றது. காதல் உணர்ச்சி பிறக்கின்றது. அழகிலும் வனப்பிலும் கவர்ச்சியிலும் இப் பருவத்தினர் ஈடுபடுகின்றனர். தகுந்த சூழ்நிலையில் தக்க கண்காணிப்புடன் இளைஞர்கள் பிறபாலாரோடு இணங்குவது ஒரளவு நன்மை பயக்கும். ஒருவரோடு ஒருவர் அளவளாவுதலால் பல நற்பயன்களை அடைகின்றனர். மகளிர் நிதானத்தையும் தன்னம்பிக்கையையும் பெருந்தன்மையையும் அடைகின்றனர். முதிர்ந்தவர் பெண்களிடம் காட்டும் மரியாதையையும் நன்னயத்தையும் காளையர் இப் பருவத்தில் காண்பிக்கின்றனர். தங்களுடைய தோற்றத்தையும் நடையையும் பெண்கள் மனத்தில் பதியச் செய்ய முயல்-