பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

கல்வி உளவியல் கோட்பாடுகள்



சூழ்நிலைக் கட்சியினர் கூறுவது : உளவியல் முறைப்படி சூழ்நிலை என்பது ஒருவன் கருவாகியது முதல் காலன் கவ்வும் வரை பெற்றுள்ள தொகுதிகளாகும். உணவு, வளர்க்கும் முறை, கல்வி, உலக அநுபவம் முதலியன எல்லாம் இதனுள் அடங்கும். சுரப்பிகளால் ஏற்படும் மாறுதல்களைக்கூடச் சிலர் சூழ்நிலையுடன் சேர்த்துப் பேசுவர். சூழ்நிலையைப்பற்றி இக் கூறிய கருத்து செயல்திறன் வாய்ந்தது. ஒரு பொருள் முன்னே நிற்பதால் மாத்திரம் சூழ்நிலையாகிவிட முடியாது. அஃது ஒருவரைத் தூண்டினால்தான் சூழ்நிலையாகும். அஃதாவது, தனியாளின் உடலுக்குப் புறம்பேயுள்ள, ஆனால் அவரது புலன்களின் எல்லைக்குள் இருக்கும், எல்லாப் பொருள்களும் விசைகளும் அடங்கிய தொகுதியே சூழ்நிலை என்பது. இவ்விலக்கணம் சூழ்நிலையைப்பற்றிப் பொதுமக்கள் கொண்டுள்ள கருத்தைவிட மிகப் பரந்தது. வாழ்க்கைச் சுழற்சியிலுள்ள எவ்வகைத் தூண்டல்களும் இதனுள் அடங்குகின்றன.

ஒரு மானிடக் குழந்தை பல்வேறு சாத்தியக் கூறுகளுடன் பிறக்கின்றது என்றும், அது மனிதத்திறன் எல்லைக்குள் அடங்கிய எந்த விதமான துலங்கலுக்கும் உட்படக் கூடியது என்றும் 'சூழ்நிலைக்' கட்சியினர் கூறுவர். சாதகமான வாய்ப்புகள் இருப்பின், மனிதன் இதுகாறும் சாதித்ததையெல்லாம் ஒருவன் சாதிக்க முடியும். மேதைத் தன்மை என்பது முட்டாள்தனத்தைப் போலவே சூழ்நிலையின் விளைவேயாகும். 'குழந்தையின் மனம் களிமண்ணைப் போன்றது; சூழ்நிலை அதற்கு எந்த வடிவத்தை வேண்டுமானாலும் அமைக்கலாம். லாக்கே[1] என்பார் கருத்துப்படி இதனை ஒரு தூய்மையான கற்பலகைக்கு ஒப்பிடலாம்; அநுபவங்கள் யாவும் அதில் பதிகின்றன. இக் கட்சியினர் பாபர், சிவாஜி முதலியோரின் எடுத்துக்காட்டுகளில் அவருடைய முன்னோர்களும் வழித் தோன்றல்களும் ஏன் அவர்களைப்போல அருஞ்செயல்களையும் திறமைகளையும்[2] காட்டவில்லை என்று வினவுவர். இவர்கள் யாவரும் தாங்கள் வாழ்ந்த காலத்திலுள்ள சமூக, பொருளாதார, அரசியல் செல்வாக்குகளால் தாக்குண்டவர்கள்; அவர்கள் வாழ்க்கை வேறு விதமாகப் போயிருந்தால் அங்ஙனம் அவர்கள் திகழ்ந்திருத்தல் முடியாது. சூழ்நிலை, பயிற்சி, கல்வி ஆகியவை மனிதனை எங்கனம் ஆக்குகின்றனவோ அங்ஙனமே அவன் வளர்கின்றான் என்பது இவர்கள் கூறும் வாத மாகும்.


  1. 10. லாக்கே-Locke.
  2. 11. திறமை-Talent