பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வி உளவியல் கோட்பாடுகள்

135


முயன்றாலும், அக் கலைகளில் சிறந்த வல்லுநர்களாலும் அக்கலைப்புலமையை அவனிடம் உண்டாக்க முடியாது; சிலரிடம் தம்முடைய செல்வாக்கால் கணிசமான அளவுகூட பலனை உண்டாக்க முடிவதில்லை. இது கழுதையைக்கட்டி 'ஓமம்’ வளர்ப்பது போன்ற செயலாக முடியும். கருப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாது என்பதை இராயருக்கு எடுத்துக் காட்டத் தெனாலிராமன் மேற்கொண்ட சோதனை ஈண்டு நினைவு கூர்தற்பாலது. ஆனால், கல்வியால் ஏற்கெனவே அமைந்து கிடக்கும் திறனைத் தேர்ந்தெடுத்து, அதனைத் தூண்டி வளர்க்க முடியும்; அது முழுவளர்ச்சியையும் பெறுவதற்குப் பாதகமான வாய்ப்புகள் யாவற்றையும் களைந்து சாதகமான வாய்ப்புகள் அனைத்தையும் தந்து துலக்கமடையச் செய்யலாம். இந்த உலகில் ஒவ்வொரு வகைத் திறனுக்கும் ஒவ்வொரு நிலையிலுள்ள திறனுக்கும் ஓர் இடம் உண்டு. அறிவுடைய கல்வி முறையால் அவற்றை இளமையிலே ஆராய்ந்து அவை சிறந்த முறையில் துலக்கமுறுவதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் அளித்தல் ஆட்சியாளரின் கடமை, அதற்கு இணைந்து துணை நின்று பணியாற்றுவது ஆசிரியரின் பொறுப்பு. ஆளுமை வளர்ச்சியே நாட்டு வளர்ச்சி.

உண்மைநிலை: மேற்கூறிய இருவேறு கருத்துகளும் குடி வழியையும் சூழ்நிலையையும் ஒன்றோடொன்று முரண்பட்ட விசைகள் என்ற தவறான முடிவுகளைக் கொண்டவை. அவை விசைகளுமல்ல, தம்முள் தாம் முரணியவையும் அன்று. குடிவழி வன்மையுடையதா சூழ்நிலை வன்மையுடையதா என்பது பிரச்சினை அன்று. இந்த இரண்டு சொற்றொடர்கள் குறிக்கும் வாழ்க்கையின் இரண்டு கூறுகளும் பிரிக்க முடியாதவை; பிணைந்து நிற்பவை. ஒன்றைப் புறக்கணித்தால் மற்றொன்றுக்குப் பொருளே இல்லை. முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டுவது யாதெனில், அத்தகைய ஆயப்படுபொருள்[1] -பிரச்சினை[2] -இல்லை என்பதே. வளரும் ஒவ்வொரு உயிரியும்-தாவரம், பிராணி, மனிதன் ஆகியவற்றுள் எதுவாயினும்-குடிவழியும் அல்ல; அல்லது சூழ்நிலையும் அல்ல; அது குடிவழியும் சூழ்நிலையும் கலந்ததொன்று. அது விடுதலையுடன் இயங்கும் படைப்புச் செயல்; அது தானே உருவாகி தானாக வளர்வது. அது வளர்வதற்குக் காரணம் குடிவழியாகப் பெற்ற இயல்பான திறனும் சூழ்நிலையுமே. அது வளர்வதற்குக்


  1. 15. ஆயப்படுபொருள்-issue..
  2. 16. பிரச்சினை-Problem