பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடிவழியும் சூழ்நிலையும்

153


வேலையே நடைபெறுகின்றது. செயற்படும் தொழிலாகிய நடத்தை சற்றுப் பொறுத்துத்தான் நிகழ்கின்றது. எனினும், பிறப்படையாத குழந்தை முற்றிலும் செயலற்றுள்ளது என்பதில்லை. கருவியல் வாழ்வின் மூன்றாம் வாரத்திலேயே அவன் இதயம் துடிக்கத் தொடங்கி குருதி வட்டமும் நடைபெறு கின்றது. மூன்றாந்திங்களிலேயே அவனுடைய தசைகள் செயற்படத் தொடங்குகின்றன; உடல்[1] வளைந்து புயங்களும் கால்களும் அசைவு பெறுகின்றன; இந்த அசைவுகள் பிந்திய திங்கள்களில் வன்மை அடைகின்றன.

புலன் உறுப்புகளும் அவற்றின் நரம்புகளும் மிக முன்னதாகவே துலக்கமுற்று பிறப்பெய்துவதற்கு முன்னரே செயற் படக்கூடியனவாக உள்ளன. ஆயினும், பார்வைப்புலன், சுவைப் புலன், நாற்றுப்புலன் ஆகியவை பிறப்பதற்கு முன்னர் பலன்தரு தூண்டல்களைப் பெறுதல் அரிது. ஒலி, கருவிலுள்ள குழந்தையின் காதுகளைத் துளைக்கக்கூடும். தொடுபுலனும் தசைப் புலனும் அது அசையும்பொழுதெல்லாம் தூண்டப்பெறுகின்றன.

குழந்தையின் அசைவுகளிலிருந்து மூளைத்தண்டின் கீழ்நிலை மையங்களும் தண்டு வடத்தின் கீழ்நிலை மையங்களும், நரம்பு களும் தசைகளும் பிறப்பதற்கு முன்னரே செயற்படுகின்றன என்பதை அறிகின்றோம். எனவே, பிறக்குமுன் நடைபெறும் செயலால் குழந்தை ஏதாவது கற்கின்றதா என்ற வினா எழுகின்றது. தசைகளின் செயலும் நரப்ப மையங்களும் தம்முடைய செயல்களால் வன்மை அடைகின்றன என்ற அளவுக்கு நாம் அநுமானிக்கலாம். பிறந்ததும் குழந்தை ஒரு புதிய சூழ் நிலையையும் வன்மையான பல தூண்டல்களையும் கொண்ட பரந்த இவ்வுலகை அடைகின்றது.

பிறந்தபின் முதிர்ச்சி

முன்னர் மூன்றாம் இயலில் உடல் வளர்ச்சி, இயக்கவளர்ச்சி என்ற தலைப்புகளில் கூறியவற்றையும் ஈண்டு திரும்பவும் இணைத்துப் பயின்று நினைவு கூர்தல் சாலப் பயன் தரும்.

குழந்தை பிறந்து சில நாட்கள் பெரும்பகுதி நேரத்தைத் தூக்கத்திலேயே கழிப்பினும், கூர்த்து கவனித்தால் அது பெரும்பாலான இயக்கங்களை இணைத்துப் பயில்வதை அறியலாம், சுவாசித்தல், தும்முதல், இரு முதல், கொட்டாவி விடுதல், சப்புதல், விழுங்குதல், சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் முதலிய செயல்களும் இவற்றுள் அடங்கும். பசியேற் படுங்கால் குழந்தை


  1. உடல்-Trunk.