பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அழுகின்றது. புழுப்போல் துடிக்கின்றது; புயங்களையும் கால்களையும் தூக்கித்துக்கிப் போடுகின்றது. இவ்வாறு செய்து பிறர் துணையைப் பெறுகின்றது. புயங்களையும் கைகளையும் வளைக்கின்றது; கைகளை விரிக்கின்றது; மூடுகின்றது. ஏதாவது கோலைக் கொடுத்தால் இறுகப் பற்றுகின்றது. கால் பெரு விரலை தெளிக்கின்றது; கண்களையும் வாயையும் மூடிமூடித் திறக்கின்றது. சுருங்கக்கூறினால், அது தன்னுடைய எல்லாத் தசைகளையும் பயன்படுத்துகின்றது. பெரும்பாலும் இவை யாவும் அனிச்சைச் செயல்களே. நாளடைவில் சில அனிச்சைச் செயல்கள் ஐக்கியத் தன்மையைப் பெறுகின்றன.

மேற்கூறிய செயல்கள் யாவும் சூழ்நிலையைப் பொறுத்தவை அல்ல. பிறந்து ஒன்று அல்லது இரண்டு திங்கள் கழிந்த பிறகு தான் குழந்தை சூழ்நிலையுடன் வினையாற்றுகின்றது. இப்பொழுது எல்லாப் புலன்களுமே செயற்படத் தொடங்குகின்றன. முதலில் பொருள் அல்லது ஆளைக் கவனிக்கத் தொடங்குகின்றது. பெருமூளையின் புறணி முதிர்ச்சியடைந்த பிறகுதான் இந்தத் துலக்கம் ஏற்படுகின்றது என்று கருத இட முண்டு. சூழ்நிலையில் ஓர் அக்கறை கொள்வதும், சூழ்நிலையிலுள்ள பொருள்களுடன் வினையாற்றுவதும் புறணி பற்றிய[1] செயல்களே. புறணி முதிர்ச்சி துலக்கமுற்றதும், அஃது உடலியக்கம்பற்றிய செயல்களின் பொறுப்பேற்கின்றது. அது கீழ்நிலை மையங்களால் செயற்படும் இயக்கங்களைப் பயன்படுத்தி அவற்றைச் சூழ்நிலையிலுள்ள பொருளுக்கேற்ப நெறிப்படுத்துகின்றது. புலன்களின் துணைகொண்டு அவற்றை அறிகின்றது. உற்றுநோக்கும் செயல்களும் இயக்கச் செயல்களும் இணைந்தே நடைபெறுகின்றன. தன்னை நோக்கி முறுவலித்து, செல்லங்கொஞ்சும் ஆளை அடையாளங் கண்டு கொள்கின்றது. புறணி சாதாரணமான கற்றல் செயல்களை மேற்கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்த பிறகுதான் இவ்வித நடத்தை குழந்தையிடம் தலைகாட்டுகின்றது. இது பெரும்பாலும் இரண்டாவது அல்லது மூன்றாவது திங்களில்தான் நிகழலாம்.

கண்ணும் கையும் : சூழ்நிலையுடன் குழந்தை தொடர்பு கொள்ளும்பொழுது, கண்ணும் கையும் முக்கியக் கருவிகளாகச் சேவை புரிகின்றன. கண் பொருளைப்பற்றிய தகவலை அறிகின்றது; கை அப்பொருளின் மீது செயலாற்றுகின்றது. இந்த இரண்டு உறுப்புகளும் இணைந்தே செயற்படுகின்றன. இத்தகைய இணைந்து நிகழும் செயல் புனிற்றிளங் குழவியிடம்


  1. புறணி -Cortex