பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

கல்வி உளவியல் கோட்பாடுகள்


டோனால்டைவிடச் சிறந்திருந்தது. எனினும், ஒரு மனிதன் முதிர்ச்சியின்மேல் எல்லையை அடைவதைவிட ஒரு வாலில்லாக் குரங்கு விரைவாக அதன் முதிர்ச்சி எல்லையை அடைகின்றது.

தொடக்கத்தில் கோவா டோனால்டைவிடப் பலவற்றில் முன்னேற்றம் அடைந்தாலும், டோனால்டும் கோவாவைவிட வேறு பலவற்றில் முன்னேற்றம் அடைந்திருந்தான். 15-ஆம் திங்களில் டோனால்டு கோவாவைவிட, உடல் வன்மையைத் தவிர அனைத்திலும் முன்னேற்றம் அடைந்திருந்தான். டோனால்டின் 19-ஆம் திங்களில் இச்சோதனை நிறுத்தப் பெற்றது.

சோதனை-2 : இரட்டைக் குழவிகளுள் ஒன்றிற்கு 45வாரத் திற்குப் பிறகு 6 வாரம் மாடிப்படிகள் ஏறுவதில் பயிற்சி அளித் தனர். மற்றொன்றிற்கு அப்பொழுது பயிற்சி அளிக்காமல் 53 வாரத்திற்குப் பிறகு 2 வாரமே பயிற்சி அளித்தனர். இரண் டாவது குழந்தையின் மாடியேறும் திறன் மேம்பட்டதாகக் காணப்பெற்றது.

சோதனை-3 : கமலாவும் விமலாவும் 26 திங்கள் வயதுள்ள ஒரு கரு இரட்டைக் குழந்தைகள். இவர்கள் தம்மிலும், குழுவினுமிருந்து முற்றிலும் பிரிக்கப்பெற்றனர். கமலாவுக்கு 5 வாரம் மிகுதியான சொற் பயிற்சி அளித்தனர். அவள் கற்றதைச் சோதனையால் அளந்து கண்டனர். விமலாவை வேறு விதமாக நடத்தினர். மொழிகற்கும் வாய்ப்பினின்று அவளை ஒதுக்கினர். ஒருவரும் அவளிடம் பேசுவதில்லை. 5 வாரங்களுக்குப் பிறகு கமலாவிற்கு அளித்த பயிற்சியையே அவளுக்கும் தந்தனர். பயிற்சி அதிகப் பலன் தந்தது. கமலா முன்னால் ஒரு நாளில் கற்றதைவிட விமலா அதிகச் சொற்களைக் கற்றாள். 4 வாரத்திற்குப் பிறகு இப்பயிற்சி நிறுத்தப்பெற்றது. விமலா கமலாவைவிட 7 சொற்களை அதிகம் கற்றிருந்தாள்.

இச்சோதனைகளால் நாம் அறிந்துகொள்பவை : (1) முதிர்ச்சி யும் ஒரு கற்றல் கூறு: கற்றலுக்கு அது மிகவும் இன்றியமையாது வேண்டற்பாலது.

(2) ஒரே தேர்ச்சி நிலையடைவதற்கு வெவ்வேறு முதிர்ச்சி நிலைகளில் வெவ்வேறான அளவான பயிற்சி வேண்டும். முதிர்ச்சி அதிகமானால் பயிற்சி சற்றுக் குறைவாகவே தேவை.

(3) மொழி வளர்ச்சியிலும் பக்குவமடைவதற்கு முன்னர் நீண்ட காலப் பயிற்சியளித்து அடையும் நலனைவிட பக்குவமடைந்த பின்னர் சிறிது காலப் பயிற்சியினாலேயே அதிகப் பலனை அடையலாம்.