பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

கல்வி உளவியல் கோட்பாடுகள்


வாழ்க்கையில் அவற்றிற்கு இடம் உண்டு. உள்ளக் கிளர்ச்சிகளே. சிந்தனையையும் நடத்தையையும் இயக்கும் முக்கிய விசைகள்; மூல காரணமாக இருப்பவை. உள்ளக் கிளர்ச்சிகள் மானிட உடலாகிய பொறிக்கு நீராவியும் பெட்ரோல் எண்ணெயும் போன்றவை. தனியாளின் நடத்தையையும். ஒரு சமூகத்தின் நடத்தையையும் உள்ளக் கிளர்ச்சிகள் அறுதியிடுகின்றன. நல்வாழ்விற்கு ஒருவித நற்பாங்கைத் தருபவை இவைகளே. எனவே, கல்வியில் இவை நன்முறையில் கவனம் பெறல் வேண்டும். நடைமுறைக் கல்வியில் இவை தக்க கவனம் பெறாதிருப்பது மிகவும் வருந்தத் தக்கது.

மாணாக்கன் பாடங்களைக் கற்பது அவன் அவற்றின்பால் கொள்ளும் கவர்ச்சியைப் பொறுத்தது. ஆசிரியர்களும் உடன் பயிலும் பிற மாணாக்கர்களும் அவனிடம் காட்டும் அன்பையும் பரிவையும் பொறுத்தது. பள்ளிவாழ்வில் காணும் நிகழ்ச்சிகளில் அவன் பெறும் இன்பமும் துன்பமும் அவன் மனப்போக்குகளைத் தீர்மானிக்கின்றன. இவை யாவும் உள்ளக்கிளர்ச்சிகளின் கூறுகளே. எனவே, பள்ளிவாழ்க்கையில் இவை சிறந்த பங்கினைப் பெறுகின்றன. பள்ளியில் பயிலும் மாணாக்கன் ஒருவனுடைய உள்ளக்கிளர்ச்சி ஆழ்ந்த அன்பிலிருந்து தீவிரமான வெறுப்புவரை மாறக்கூடும். அங்ங்னமே, உடன்பயில்வோரிடமும் விளையாடுவோரிடமும் உற்ற நட்பிலிருந்து ஆழ்ந்த பகைமை வரை அவனுடைய உள்ளக் கிளர்ச்சி வளர்தல்கடும். எனவே, ஆசிரியர் ஒவ்வொரு மாணாக்கனையும் நன்கறிந்து ஒல்லும் வகையில் அவரவருடைய உள்ளக் கிளர்ச்சியினை நன்முறையில் கையாள வேண்டும். தற்காலக் கல்வியின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று உள்ளக்கிளர்ச்சிகளுக்கு நேராக முறையீடு செய்தல் ஆகும். சுவையறிவை வளர்க்கும் வகையில் உள்ளக்கிளர்ச்சி களைக் கையாளுவது சாலப் பயன்தரும். -

மாணாக்கர்களிடம் சுவையறிவை எங்ங்னம் வளர்ப்பது? இதனை மனத்தின் முந்நிலைகளாகிய உணர்ச்சி நிலை"[1], அறிதல் நிலை',[2] இயற்றிநிலை [3]ஆகியவற்றின் அடிப்படை களில் ஆராய்வோம்.

முதலாவது உணர்ச்சி நிலை: சுவை வளர்ச்சியில் இந்நிலை தான் மிகவும் முக்கியமானது. எதையும் சரியாக உணரும் நிலையை மாணாக்கர்களிடம் வளர்க்கவேண்டும். சிறு குழந்தை-

.


  1. 50. உணர்ச்சி-Affection.
  2. 51.அறிதல் நிலை'-Cognition.
  3. 52.இயற்றிநிலை -Conation.