பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்கு நிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

203


நம்மிடமும் தோன்றுகின்றது. இங்ஙனமே, விளையாட்டும் நம்மிடம் அடங்கிக் கிடக்கும் உணர்வுகள் வெளிப்படத் துணை செய்கின்றது. நாகரிக வாழ்க்கையில் போரூக்கம்[1] செயற்படுவதற்கு அதிக வாய்ப்பில்லை. நாகரிக உலகில் விளையாட்டில் அவ்வாய்ப்பு கிடைக்கின்றது. ஒவ்வொரு விளையாட்டும் போலிச்சண்டையே; அதில் குருதி சிந்துவதில்லை, சினமும் வெளிப்படுவதில்லை. ஆனால், அந்த இயல்பூக்கத்திலிருந்து ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பினை நல்குகின்றது. உண்மை உலகில் நேரும் ஏமாற்றங்களுக்கு ஈடு செய்யும் பொருட்டு விளையாட்டு உண்டாகிறது எனலாம். அங்ஙனமே, பாவனை உலகில் குழந்தைகள் மேற்கொள்ளும் விளையாட்டிலும் இவ்வாற்றல்கள் வெளிப்படுவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பொழுது போக்குக் கொள்கை[2] : இது விளையாட்டின் ஒரு கூறினை வலியுறுத்துகின்றது; பல கூறுகளை விட்டுவிடுகின்றது.


  1. போரூக்கம்-Instinct of pugnacity.
  2. பொழுது போக்குக் கொள்கை-Recreation theory.