பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

கல்வி உளவியல் கோட்பாடுகள்



அவ்வளவு எளிதாகப் பெறப்படுவதன்று. அடிக்கடி நாம் சிக்கலான துலங்கள் தொடர்ச்சியையோ, அல்லது பற்பல துலங்கல் வகைகளினின்றும் சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதையோ கற்க வேண்டியுள்ளது. பார்த்துச் செய்து கற்றல்[1] முறையால் கற்க வாய்ப்பு இருப்பினும், முயன்று தவறும் செயல்கள் இருந்தே தீரும். மிதிவண்டியை இயக்குவது, நீந்துவது போன்ற செயல்களை ஒருவர் காட்டியவுடன் நம்மால் அவற்றைக் கற்றுக் கொள்ள முடிவதில்லை. அக்காட்சியால் சிறிது கற்றபோதிலும், நமது முயற்சியும் தவறும் கூடிய பயிற்சியினால்தான் அவை முற்றுப்பெறுகின்றன. நான்கையும் ஐந்தையும் கூட்டுவது ஒர் எளிய கணக்கு. இதைச் செய்வதற்குக் கூட நாமெல்லோரும் ஒரு முறையைக் கையாண்டிருப்போம். சிறு குழவிகள் இதனைச் செய்வதற்குப் புளியங்கொட்டைகள், சிறுகூழாங்கற்கள், விரல்கள் ஆகியவற்றைத் துணைகொள்ளுகின்றன. பலமுறை இவ்வாறு செய்தபின், முயற்சியும் தவறும் இன்றியே இதனைச் செய்கின்றன.

இரண்டாவது: பார்த்துச் செய்து கற்றல். முன்னையதை விட இது சற்று உயர்ந்த முறை. அதனைப்போல் இது பொறியியக்கம் போன்றது மன்று. ஒரு சிக்கலான இயக்கத்தின் பகுதிகளைக் கண்டு, அவற்றைப் பின்பற்றுவதே பார்த்துச் செய்து கற்றலாகும். ஆனால், இங்கும் அடிப்படையான இயக்கங்களின் காரணங்களை அறியாமை காணப்பெறுகின்றது. கருத்தேற்றத்தில்[2] பிறர் கருத்துகளைத் தகுந்த முகாந்திரங்களின்றி ஏற்றுக் கொள்வதைப்போலவே, இங்கும் பிறர் இயக்கத்திட்டத்தைக் காரண காரியத் தொடர்பை யறியாமல் பின்பற்றுகின்றோம். இச்செயல் மக்களிடமும் விலங்குகளிடமும் காணப்பெறுகின்றது. குரங்குகளின் பின்பற்றும் இயக்கம் நாம் அறிந்ததே. பின்பற்றல் நற்பயன் அளிக்கவேண்டுமாயின், வீடுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் சிறுவர்களும் முதிர்ந்தோரும் பின்பற்றக்கூடிய சிறந்த முன் மாதிரிகள் தேவை.

மூன்றாவது: உற்று நோக்கிக் கற்றல்[3] . மேற்கூறிய இரண்டையும்விட இது சற்று உயர்ந்தது. முயன்று தவறிக் கற்றல் முறையில் எச்செயல் வெற்றி தருகின்றது என்பதை ஒருவாறு பார்க்கின்றோம். பார்த்துச் செய்தவிலும் அச்


  1. 8. பார்த்துச் செய்து கற்றல்-Learning by imitation.
  2. 9. கருத்தேற்றம்-Suggestion.
  3. 10. உற்று நோக்கிக் கற்றல்-Learning by observation