பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

கல்வி உளவியல் கோட்பாடுகள்


தொகுத்து அறிவியல்முறை'[1] என்று வழங்குவர். அறிவியல் முறையில் பல படிகள் உள்ளன. கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கலால் தகவல்களைத் திரட்டி அவற்றை ஒரு பிரச்சினைபோல் கூறுதல் முதற்படியாகும். இவற்றைக் கொண்டு கருதுகோள்கள் [2]அமைத்துக்கொள்வது இரண்டாவது படியாகும். இக் கருதுகோள்கள் சரியான வைதாமா என்பதை அறிவதற்கு மேலும் பல புள்ளிவிவரங்களை எடுகோள்களை [3](4)த் திரட்டி அவற்றிற்கு விளக்கம் தருதல் மூன்றாவது படியாகும். பிறகு இவற்றிலிருந்து பொதுவிதிகளை உண்டாக்குதல் நான்காவது படியாகும். இப்பொதுவிதிகளை புதிய செயல் களில் அல்லது நிகழ்ச்சிகளில் பொருத்திப் பார்த்தல் ஐந்தாவது படியாகும். ஆகவே, அறிவியல் அறிவு நிச்சயமானது; நம்பத் தகுந்தது; பிறரால் சரிபார்க்கக் கூடியது. பல கருவி கரணங்களையும் அளவை முறைகளையும் மேற்கொண்டு திரட்டப் பெற்ற இவ்வறிவு மிகத்திட்டமானது.

உளவியல் உயிரியின் மனச்செயல்களை விரித்துரைக்கும் துறை என்று மேலே கூறினோம். சூழ்நிலைக்கேற்றவாறு தனிப்பட்ட உயிரியின் செயல்களைப்பற்றிய தகவல்களே இத் துறை விரித்துரைக்கும் பொருள், ஏனைய அறிவியல்துறை களைப் போலவே இத்துறையிலும் தகவல்கள் கட்டுப்பாட்டுக் குட்பட்ட உற்றுநோக்கலால் திரட்டப்பெறுகின்றன. இத் தகவல்களைக் கொண்டு அவற்றினுள் அமைந்துகிடக்குந் தொடர்புகளைக் காண முயலுகின்றது. இத் தொடர்புகளே உளவியல் விதிகள் அல்லது கோட்பாடுகள். இவை பருந்து நோக்காக மனிதச் செயல்களையும் அவற்றின் இயல்பையும் எடுத்துரைக்கின்றன. இவ்விதிகள் மனித நடத்தையைப் புரிந்து கோள்ளத் துணை புரிவதுடன் அதனை முற்கூறவும் (Predict) கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

உளம் மிகவும் சிக்கலானது. அதனோடு ஊடாடும் பொருள் களடங்கிய சூழ்நிலையும் மக்களடங்கிய சமூகச் சூழ்நிலையும் மாறிக் கொண்டிருக்கும் இயல்புடையவை. அன்றியும், சடப் பொருள்கள் போலன்றி உளம் சுயேச்சையாக இயங்கவல்லது. இந்நிலையில் உளத்தைப்பற்றி அறியும் தகவல்கள் முற்றிலும் நம்பக்கூடிய முறையில் இல்லை. ஆகவே, உளவியல் முற்றின அறிவியல் ஆகாது; அதனை இளம் பருவத்திலுள்ள அறிவியல்


  1. 12.அறிவியல்முறை-Scientific method.
  2. 13.கருதுகோள்கள் -Hypothesis,
  3. 14. எடுகோள்.Data,