பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றல்

211


விதிகளைக் கூறியுள்ளார். அவை மூன்றும் சிறார்கட்குப் பயிற்றும் ஆசிரியர்களுக்குப் பெருந்துணையாக இருக்கும். அவற்றை ஈண்டு ஆராய்வோம்.

முதலாவது: பயன் விதி[1] இவ்விதி ஒரு செயலைப் பெறும் பொழுது ஏற்படும் விளைவின் சிறப்பை வலியுறுத்துகின்றது. "ஒரு தூண்டலும் துலங்கலும் இணையும் பொழுது இன்பம் உண்டாயின் அவ் விணைப்பின் வன்மை அதிகரிக்கின்றது; துன்பம் ஏற்பட்டால் அவ் விணைப்பின் வன்மை குறைகின்றது" என்பது அவர் கூறும் விதி. இன்ப நிலை என்பது பிராணி தடுக்காமல் நீடித்துத் திரும்பப் பெற விரும்பும் நிலை; துன்பநிலை என்பது பிராணி நீடிக்காமல் முடிக்க விரும்பும் நிலை.

இதிலிருந்து நாம் அறிபவை இவை: (1) கற்றலுக்கும் இன்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இன்பத்தைக் கல்வியினின்று நீக்கி அளத்தல் அரிது. ஆயினும், ஒரு நிலையில் இன்பம் பயப்பனவற்றை அறிந்து அவற்றைக்கொண்டு ஏனைய தூண்டல். துலங்கல் இணைப்பு வன்மைகளையும் முற்கூறலாம். (ii) பயன் அதிகமாயின் கற்றலும் அதிகமாகின்றது என்பது சோதனை காட்டும் உண்மை. பயன் அதிகமாயின் நோக்கம் நன்கு அமையும்; நோக்கம் நன்கமையின், கற்றல் விரைவாகவும் திட்டமாகவும் நடைபெறும். (iii) துலங்கலுக்கும் பயனுக்கும் இடையேயுள்ள கால இடையீடு குறையக் குறையக் கற்றலின் வன்மை அதிகரிக்கும்.

வெற்றியையும் மனநிறைவினையும் தரும் செயல்களைத் திரும்பத்திரும்பச் செய்கின்றோம். தோல்வியையும் மனநிறை வின்மையையும் தரும் செயல்களை மேற்கொள்ளாதிருக்கக் கற்கின்றோம். பாடங்களில் தேர்ச்சி பெறுவர்களைப் போலவே ஆட்டங்கள், இசை, நடித்தல் போன்றவற்றில் தகுதி காட்டும் சிறுவர்கள் தங்கள் தோழர்களால் பாராட்டப்பெற்றால் அதிகத் திருப்தியடைந்து அதனால் அத்துறைகளில் மேன்மேலும் திறன் பெறுகின்றனர். உற்சாகம் ஊட்டப் பெறாதவர்கள்பால் தேர்ச்சிக்குறைவு உண்டாகின்றது. இதை நடைமுறையில் நாம் காண்கின்றோம்.

வகுப்பறையில் பொருத்தம்: வகுப்பறையில் இவ் விதியைக் கையாளும் வாய்ப்புகள் எண்ணற்றவை; ஓரளவு வெளிப்படை யானவை. ஒரு சிலவற்றைமட்டிலும் ஈண்டு தருவோம். மாணாக்கர்கள் பள்ளியில் பெறும் அநுபவங்கள் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கக்கூடியவையாக இருத்தல் வேண்டும்.


  1. பயன் விதி-Law of effect.