பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

கல்வி உளவியல் கோட்பாடுகள்


இதற்கு இக் கூறும் நிலைகள் நிலவவேண்டும்: (i) தம் தொழிலையும் மாணக்கர்களையும் விரும்பும் நல்ல மனநலத்தைக் கொண்ட ஆசிரியர்கள்; (ii) மாணாக்கர்களின் தனிப்பட்ட வாழ்வையொட்டியும் அவர்கட்குப் புரியவும் விளங்கவும் கடிய பள்ளி வேலையும் செயல்களும்; (iii) ஓரளவு வெற்றியைப் பயக்கக்கூடிய மாணாக்கர்களின் ஆற்றலுக்குட்பட்ட பள்ளிவேலையும் செயல்களும்: (iv) படிப்படியாகவுள்ளனவும் மாணாக்கர்கட்கே வளர்ச்சி எளிதில் புலனாகக் கூடியனவுமான பள்ளி வேலைகள்; (v) புதுமை மாறாமல் ஒரு பொருளைப் பல்வேறு கோணங்களில் அணுகும் முறைகள்; (i) மாணாக்கர்கள் சரியான வழிகளில் செல்லுகின்றனர் என்பதற்கு அறிகுறியாக ஆசிரியரின் வழிகாட்டலும், பாராட்டுதலும் உற்சாக மூட்டுதலும்.

இரண்டாவது-பயிற்சி விதி[1] : இவ்விதி பயிற்சியின் இன்றி யமையாமையை வற்புறுத்துகின்றது. "ஒரு தூண்டலுக்கும் துலங்கலுக்கும் உள்ள இணைப்பு பயிற்சியால் வலியுறுகின்றது; நீண்டகாலம் பயிற்சியிராவிடில் அவ் விணைப்பு வன்மையற்றுப் போகின்றது" என்பது விதி. பயன்விதி பயிற்சி விதியில் முடிகின்றது.

ஒரு செய்யுளை மனப்பாடம் செய்யவும், ஓர் இராகத்தை நன்றாகப் பாடவும், மிதிவண்டியிலேறிப் பாங்காகச் செல்லவும், அவற்றைப் பல முறை பயிலவேண்டும். எழுத்து, திருத்தம் பெறுவதற்கும் பயிற்சி வேண்டும். ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது பழமொழியன்றோ? வாய்ப்பாடு சம்பந்தமான சிறு கணக்குகளைப் பல முறை போடுவதால் சிறுவன் வாய்ப்பாட்டைக் கற்கின்றான். நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் பாத்திரங்களுக்கிடையே நடைபெறும் உரையாடல்களைப் பலமுறை படித்து ஒத்திகையின்பொழுது திரும்பத் திரும்பக் கூறிப் பயிற்சி பெறுகின்றனர். வீணையில் பயிற்சி பெறுவோர் அதனை மீண்டும் மீண்டும் பன்முறை மிழற்றிக் கற்கின்றனர். நாட்டியம் ஆடுவோரும் பலமுறையில் தப்படிகளைப் போட்டுப்போட்டுத்தான் கற்கின்றனர்.

பயிற்சியின்மையால் பலவற்றை மறக்கின்றோம். அடிக்கடிப் பயன்படுத்தும் வாய்ப்புகளின்மையால் பல செய்திகள் மறந்து போகின்றன. தொல்காப்பியம் போன்ற இலக்கணங்களை யெல்லாம் நன்கு கற்று முதல் வகுப்பில் தேறிய புலவர், தாம் பணியாற்றும் இடத்தின் காரணமாக அவற்றை அடிக்கடிக்


  1. பயிற்சி விதி-Law of Exercise.