பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

கல்வி உளவியல் கோட்பாடுகள்


ஆயத்தமாக இருக்கும்பொழுதுதான் கற்றல் நற்பயன் அளிக்கும். பக்குவமடைதல் அல்லது முற்றுதல், ஊக்கங்களின் வன்மை, மனப்பான்மை, பழக்கங்கள், பொதுத்திறன்கள், தனித் திறன்கள், வாழ்க்கையின் குறிக்கோள்கள் போன்ற பல ஏதுக்களைக் கொண்டது ஆய்த்தம் என்பது. இவற்றுள் சில பிறவிப் பண்புகள்; சிலகற்ற பண்புகள்.

படித்தலுக்கு [1]ஆயத்தம் வராத குழந்தைக்குப் படித்தலைக் கற்பித்தல் பயன்தராது. படித்தலுக்கு ஏதுவான பண்புகளாவன: ஆறரை மனவயது [2] நிறைவு பெற்றிருத்தல், போதுமான அளவு பார்க்கும் ஆற்றல், போதுமான அளவு கேட்கும் ஆற்றல், உள்ளக் கிளர்ச்சியின் மீது ஓரளவு ஆட்சி பெறல் ஆகியவை. இந்த அளவு குழந்தை பக்குவமடையாவிட்டால் அது படிப்பதற்கு ஆய்த்த மாகவில்லை என்று கொள்ள வேண்டும்.

ஆயத்தமாக இருப்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருவோம். வகுப்பில் அடங்கிக் கிடந்து வெளிவந்த சிறுவன் மாலை ஐந்து மணிக்கு விளையாட ஆயத்தமாக இருக்கின்றான்; படிக்க ஆயத்தமாக இல்லை. மொழிப்பாடத்தில் தேர்ச்சி யுடையவன் அதனைப் படிக்க ஆயத்தமாக உள்ளான்; கணிதப் பாடத்தில் தேர்ச்சிக் குறைவுடையவன் கணக்குப்போட ஆயத்த மாக இல்லை. “வெற்றியைப்போல் வெற்றியைத் தருவது வேறொன்றுமில்லை” என்பது ஆங்கிலப் பழமொழி.

ஒரு நாள் பிற்பகல் 3 மணிக்குச் சூரிய.கிரகணம் பிடிக்கின்றது. வகுப்பிலுள்ள மாணாக்கர்களுக்குப் பாடவேளைப் பட்டியின்படி நடைபெறும் சமூகப் பாடத்தில் விருப்பமில்லை. எல்லோரும் புதிதாக நிகழவிருக்கும் சூரிய.கிரகணத்தைக் காணத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சுவையற்றதாகவுள்ள சமூகப் பாடத்தைக் கற்பித்தலால் யாது பயன் விளையும்? புதுபோக்கும் [3] அநுபவமுமுள்ள ஆசிரியர் இந் நிலையை மிகத் திறமையாகச் சமாளிக்கலாம். மாணாக்கர்களை வகுப்பிற்கு வெளியே இட்டுச்சென்று அந்த இயற்கை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கச் செய்யலாம்; புகைக்கண்ணாடியைக் கொண்டு ஒவ்வொருவரையும் அந்நிகழ்ச்சியைக் காணும் படிச்செய்யலாம்; அதன்பிறகு புவியியல் பாடத்தில் பல செய்திகளையும் விதிகளையும் பற்றிக் கற்பிக்கலாம். மாணாக்கர்கள் எதற்கு ஆயத்தமாக உள்ளனர் என்பதை அறியாது கற்பித்தால்


  1. படித்தல்-Reading
  2. மன வயது-Mental age
  3. புதுப்போக்கு-Originality