பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பொதுவாகப் பெற்றோரிடத்திலும் பெரும்பாலான ஆசிரியரிடத்திலும் ‘அறிவு எங்கிருந்து வருகிறது என வினவின் அவர்கள், நூல்களினின்றும் சொற்பொழிவுகளினின்றுமே’ என விடை பகர்வர். ஆனால் நீந்துதல், நூற்றல் போன்ற திறன்கள் எப்படியேற்படுகின்றன என்று கேட்பின், அவற்றைச் செய்வ தாலேயே என்று கூறுவர். சிலர் உண்மைப் பொருள்களைப் பயின்று அத்துடன் நூல்களையும் படிப்பதால் நற்பயன் விளையும் என்று கூறுவர். கைத்தொழிலாசிரியரும் இசையாசிரியரும் அவர்கள் கற்பிக்கும் துறைகளின் திறன் செயற் பயிற்சினால் தான் வளர்கின்றது என்பதை நன்கு அறிவர். இதனை எல்லா ஆசிரியர்களும் உணர்ந்தால் சாலப் பயன்தரும். ஒரு திறன் உண்டாகிவிட்டதா என்று சோதிக்க விரும்பினால் அச்செயலில் மாணாக்கன் பெற்ற தேர்ச்சியைக் காணவேண்டும்.

சிலர் பாடத்தின்முலம் கற்பதற்கும் அநுபவத்தின் மூலம் கற்பதற்கும் இடையேயுள்ள தொடர்பினைச் சரியாக உணர் வதில்லை. பாடத்திட்டத்தின் மூலம் கற்பதும் அநுபவத்தின் மூலம் வந்ததே. மனிதர்கள் திரும்பத் திரும்ப இயற்றிச் சீராக்கிய அநுபவமே பாடமாகும். பாடம் எவ்வாறு தோன்றியது என்று உணராமல் அதை ஏட்டுப் பாடமாகக் கற்பித்தலால் பல இங்குகள் விளைகின்றன. மாணாக்கர்கள் பொருள்களைக் கற்பதற்குப் பதிலாகச் சொற்களையே கற்கின்றனர். வெற்றெனத் தொடுத்தலையே [1] அவர்கள் அறிகின்றனர். ‘சமூகம் என்றால் என்ன?’ என்பது ஆறாம் வகுப்பு ஆசிரியர் மாணாக்கருக்கு விடுக்கும் வினா. அதற்கு ஒரு நீள வாக்கியத்தில் விடையையும் அவர் தந்து விடுகின்றார். மாணாக்கர்கள் அதன் பொருளை விளங்கிக் கொள்ளாமலேயே மனப்பாடம் செய்கின்றனர். தாய்மொழி மூலம் கல்வி ஏற்பட்ட பிறகும் ஆசிரியரின் அநுபவக் குறைவாலும், கற்பிக்கும் முறைகளில் மாணாக்கர் நேர் அநுபவம் பெறும் வாய்ப்புகளின்மையாலும் இந்த “வெற்றெனத் தொடுத்தலை” மந்திரம்போல் கற்பிக்கும் நிலை இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

இவ்வாறு வாழ்க்கைக்கும் பள்ளிக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்பட்டிருப்பதாலும், பள்ளியில் பெரும்பாலும் பாட நூல்களையே பயன்படுத்துவதாலும் கற்றலுக்கும் அநுபவத்திற்கும் உள்ள இணைப்பைப் பலர் காண்பதில்லை. இத்தவற்றினைத் திருத்துதல் தற்காலக் கல்விப் பிரச்சினைகளுள் ஒன்று. அதுபவத்தைக் கற்றலின் அடிப்படையாகக் கொள்வதற்கு ஆதாரப்பள்ளி பெரிதும் முயல்கிறது.


  1. வெற்றெனத் தொடுத்தல்-Verbalis