பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

கல்வி உளவியல் கோட்பாடுகள்


ஐந்தாவதாக: ஆசிரியர் மாணாக்கர்மீதும் தன் தொழில் மீதும் உற்சாகமும் அக்கறையும் உடையவராக இருத்தல் வேண்டும். ஆசிரியரின் மனப்பான்மை மாணாக்கர்களது கற்றலைப் பாதிக்கும் என்பது ஓரளவு உண்மையே. உற்சாகத்துடனும் துடிப்புடனும் புன்முறுவலுடனும் உண்மையுடனும் அக்கறையுடனும் வகுப்பில் துழையும் ஆசிரியரின் பாடத்திற்கு, சோர்வாகவும் கவனமின்றியும் தூங்கி வழிந்த முகத்துடனும் வகுப்பில் நுழையும் ஆசிரியரின் பாடத்திற்குத் தரும் மதிப்பை விட அதிக மதிப்பு தருவர்; அப்பாடத்தை நன்கு கவனிப்பர்; அதில் அதிக அக்கறையையும் காட்டுவர். சில ஆசிரியர்கள் வகுப்பில் நுழைந்ததும் மின்னூட்டம் பெற்றதுபோன்ற சூழ்நிலையை உண்டாக்கிவிடுவர்; அவர்கள் தோற்றமே உற்சாக அலையை எம்மருங்கும் வீசும். இப்படியும் அப்படியும் பார்க்கும் ஒரு சிறு பார்வையினாலேயும், இங்கொன்றும் அங்கொன்றுமாக விடுக்கும் வினாக்களினாலேயும் வகுப்பில் கவர்ச்சியை எழுப்பிவிடுவர். அவர்களுடைய ஆற்றல், நகைச் சுவை, கவர்ச்சி, வேலையில் ஆர்வம் கற்றலுக்குப் பொருந் தூண்டல்களாக அமைகின்றன.

மாணாக்கரது கவர்ச்சிகளைக் கண்டறிதல்: மாணாக்கரது கவர்ச்சிகளைக் காண்பதற்கும் ஆசிரியர்கள் பல முறைகளைக் கையாளுகின்றனர்.

(1) மாணாக்கனுக்கு இன்பம் தரும் தொழில்களையும், பொழுது போக்குச் செயல்களையும் எழுதும்படி செய்து அவற்றிலிருந்து அறிந்து கொள்ளுகின்றனர்.

(2) ஆசிரியர், பெற்றோர், உடன்பயிலும் மாணாக்கர் ஆகியோர் ஒரு மாணாக்கனை நேரில் கவனித்து, கவனித்தவற்றைப் பதிவேடுகளில் பதிந்து வைக்கலாம். மாணாக்கன் பல செயல்களில் கழிக்கும் நேரத்தையும் அவற்றில் அவனுக்குள்ள விருப்பத்தையும் கவர்ச்சியையும் இம்முறையில் அறியலாம். பள்ளிப்பாடங்கள், ஓய்வு நேரத்தைக் கழிக்கும்முறை, ஆடுகளநிகழ்ச்சிகள் முதலிய அனைத்தையுமே நாம் கவனித்தல் வேண்டும்.

(3) மாணாக்கன் பல செயல்களில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கும் சோதனை நிலைமைகளை அமைக்கலாம். இவற்றில் அவன் பங்கெடுக்கும்பொழுது அவனுடைய நடத்தைகளின் மூலம் அவனுடைய கவர்ச்சிகளை அறியலாம். பள்ளிச் செயல்களையே சோதனை நிலைமைகளாகக் கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் அவன் காட்டும் அக்கறையிலிருந்து