பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

239


மானவை. தணியாளின் வாழ்க்கையில் வளரும் கவர்ச்சிகள், பழக்கங்கள், மனப்போக்குகள் போன்றவை அகவயமானவை.

முதலில் புறவயமானவற்றை நோக்குவோம். அவை:

(1) தூண்டல் வகை: ஒளி, அல்லது ஒலித்தாண்டல்கள் பிறவற்றைவிடச் சிறப்பானவை. இப்புலன்களிலும் சில பண்புகள் இன்னும் சாதகமான நிலைமைகளை உண்டாக்குவன. [எ-டு.] கிச்சிலி, மஞ்சள் நிறங்கள். வண்ண விளம்பரங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. இங்ஙனமே சிலவகை ஒலிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. சில வகை மணங்கள், வலி போன்றவையும் சிறந்த தூண்டல்களாக அமைதல் கூடும், காரணம், அவை உயிரிக்கு மிகவும் முக்கியமானவை. கீழ்நிலைப் பிராணிகளிடையே நேரிடும் துலங்கவிலிருந்து தூண்டல்களின் தேர்தலில் உயிரியல் அடிப்படையைக் காணலாம். தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள், வேறு பூச்சி யினங்கள் ஒரு பொருளின் ஏதாவது ஒரு தலைசிறந்த பண்பினாலேயே உணவைக் கண்டறிகின்றன; அல்லது இணை விழைச்சு (கலவி) புரிகின்றன.

(2) தூண்டலின்[1] உறைப்பு [2]: உரத்த ஒலி, பேரொளி, பலமான தாக்குதல், பொறுக்க முடியாத பல்வலி, கவனத்தை வலிதிற் பெறுகின்றன. திடீரென்று தோன்றும் பேரொளி, பேரொலி ஆகியவையே மிக்க கவனம் பெறுகின்றன. இப் பெருந்துரண்டல்களும் நீண்ட நேரம் தொடர்ந்து நீடித்தால் வலியிழக்கின்றன. தகரத் தொழிற்சாலையருகிலும் கடற் கரையருகிலும் வாழ்வோர் அவ்விரைச்சலால் பாதிக்கப் பெறுவதில்லை. ஆனால், திடீரென்று தூண்டலின் அளவு குறைதலும் கவனத்திற்கு ஏதுவாகும். ஒரு பெரிய பொறி வேலை செய்து திடீரென்று நின்றால், அவ்வமைதி நம் கவனத்தை இழுக்கின்றது. அங்ஙனமே, நம் அறையில் இயங்கிக் கொண்டிருக்கும் கடிகாரத்தின் 'டிக்' ஒலியை நாம் சாதாரணமாகக் கவனிப்பதில்லை. கடிகாரம் திடீரென்று நின்றுவிட்டால் உடனே அதைக் கவனிக்கின்றோம். ஆகவே, அமைதியும் கவனம் பெறுவதற்குரிய துண்டலே. ஆயினும், இரைச்சல் அமைதியைவிட வலிமை வாய்ந்தது. ஒரு மென்சொல்லுக்கு மறுமொழி இல்லையாயின், உரக்கக் கத்தினால் உடனே பதில் வருகின்றது.


  1. தூண்டல்-Stimulus.
  2. உறைப்பு-Intensity.