பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

257


வல்லுநர், அறிவியல் அறிஞர், சமூகச் சீர்திருத்தவாதி, போர்த் தலைவன் ஆகியோருக்குப் பயன்படுகின்றது.

இரண்டாவது: மனித ஒத்துணர்வுக்குக் கற்பனை மிகவும் இன்றியமையாது வேண்டற்பாலது. தம்மைப் பிறர்நிலையில் வைத்துப் பார்த்தலாலும், தொல்லையுறுவோர் நிலையிலும் துன்பக்கடலில் மூழ்கியுள்ளோர் நிலையிலும் தம்மை வைத்து நினைந்து பார்த்தலாலுமே பிறரை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. நம்மில் பலர் இவ்வாறு செய்ய இயலாததனால் தான் இன்று உலகில் இடுக்கண் நிறைந்துள்ளது.

மூன்றாவது : கற்பனை இன்ப வாழ்க்கைக்குச் சாதகமா கின்றது. எதிர்காலத்தை எண்ணி, நம்முடைய குறிக்கோள்கள், கனவுகள், விருப்பங்கள் ஆகியவை மகிழ்ச்சியுடன் நிறைவேறும் சந்தர்ப்பங்களைக் கற்பனையில் காண்கின்றோம். இத்தகைய சந்தர்ப்பங்கள் எழாவிடினும், கனவு காண்பதாலும் கற்பனை செய்வதாலும் மட்டிலுமே இன்பத்தை அடைகின்றோம். கற்பனையில்லாதவர் வாழ்க்கையைச் சுவையுடன் நடத்த முடியாது; இலக்கியம், இசை, சிற்பம், வண்ண ஒவியம், நட்பு போன்றவற்றைத் துய்த்தல் இயலாது. -

நான்காவது::கற்பனை மகிழ்ச்சியைத் தருகின்றது. கற்பனை யாற்றலுள்ளவர்கள் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் முதலியவற்றை எழுதி இன்பம் அடைகின்றனர்; எனவே, கற்பனை படைப்பாற்றலுக்குத் துணைசெய்கின்றது. புதியன புனைதலுக்குக் கற்பனை மிகவும் இன்றியமையாதது. +

ஐந்தாவது : கற்பனை ஒழுக்கவளர்ச்சிக்குத் துணைபுரிகின்றது. சிறுவர்கள் வீரர்கள், பெரியார்கள், சமயத்தலைவர்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து, அவர் களைப்போல் தாமும் ஆகவேண்டும் என்று கற்பனை செய்கின் றனர்; தம்மை அவர்கள் நிலையில் வைத்தும் எண்ணுகின்றனர். இது தன்.மதிப்புப் பற்றினை வளர்த்து ஒழுக்கம் உருவாகத் துணையாக நிற்கின்றது.

ஆனால், அதிகமான பகற்கனவும் கட்டுக்கடங்காத கற்பனையும் தீங்கு பயப்பனவாம். இதனால்தான் மாண்டிசோரி அம்மையார் கற்பனையும் கட்டுக்கதைகளும் சிறுகுழவிகட்கு ஆதாதென்பர். இது மிகைபடக் கூறுதலாகும், படைப்புக் கற்பனையும் வெறும் கனவில்தான் தோன்றுகிறது. எனவே, குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்குப் பள்ளி யிலேயே வாய்ப்புகளைத் தருதல் வேண்டும்,