பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

275



தலைத் தடைசெய்யும். தேர்வு மண்டபத்தில் நுழைந்ததும் மாணாக்கர்கள் அளவுக்கு மீறிய கவலையால் தம் வேலையைப் பாழாக்கிக்கொள்வர். ஐயம் மீட்டுமொழிதலைத் தடை செய்கின்றது. சிந்தனை செய்வோர் நினைவுகூர்தலில் வெற்றி அடைவர்.

(2) தூண்டலுக்கு நல்ல வாய்ப்பினை நல்குதல் வேண்டும். நாம் விரும்பும் மனிதரின் பெயரை வருவிக்க வேண்டுமாயின் அவரை மேலும் கீழும் நன்கு உற்றுப் பார்க்கவேண்டும்.

(3) நினைவுகூர்தலில் ஏதாவது தடையேற்படின், முயற்சியை விட்டுவிடவேண்டும். சிறிது நேரம் கழிந்தபின் அது தானாக நினைவுக்கு வரும். இது பலரது அநுபவமாக இருத்தலை எண்ணிப் பார்க்கலாம்.

மீட்டறிதல்: நினைவுகூர்தலுக்கும் மீட்டறிதலுக்கும்[1] உள்ள வேற்றுமையை மேலே கூறினோம். மீட்டறிதல் நினைவுகூர்தலைவிட எளிது; ஒருவரது பெயரை நினைவு கூராமலேயே அவரை மீட்டறியலாம். இதனால்தான் நிரப்பு ஆய்வுகளும் பல்-விடையிற் பொறுக்கு ஆய்வுகளும் கட்டுரை ஆய்வுகளைவிட எளிதாக உள்ளன. மீட்டறிதல் என்பது முன் நிகழ்ந்ததனைத் திரும்பவும் அறிதல் ஆகும். சாதாரணமாக சில சமயங்களில் இவ்வறிவு அரைகுறையாக உள்ளது. ஒருவரைப் பார்த்து, உங்களை எங்கேயோ பார்த்திருக்கின்றேன்; உங்கள் முகம் தெரிந்த முகமாக இருக்கின்றதே?' என்று நாம் கூறுகின்றோம். வேறு சில சமயங்களில் ஒருவரை நெருங்கி ஏதோ செய்தியைக் கேட்க நினைத்து உங்களை அவர் என்று நினைத்தேன்; மன்னிக்கவும்" என்று சொல்லுகின்றோம்.

படித்தலில் ஒருவர் உட்கார்ந்து எழுதக்கூடிய சொற்களை விட அவர் படிக்கும்பொழுது மீட்டறியும் சொற்களின் எண்ணிக்கை அதிகமானது.

மறதி: மனத்தில் இருத்தலைப்பற்றி நாம் அறிந்தவற்றிலிருந்து நாம் எதையும் முழுவதையும் ஒருங்கே மறப்பதில்லை என்பதை அறிகின்றோம். ஆகவே, மறத்தலை மனத்திலிருத்துவதுதான் தோல்வி என்று கருதுவதைவிட நினைவுகூர்தலின் திறனின்மை என்று கருதுவதே சரியானதாகும். மறதியில் இரு வகை உண்டு. ஒன்று செயலற்ற மறதி[2]; முதலில் கற்றது போதுமானதாக இல்லாவிடினும் அல்லது முதல் அநுபவம்


  1. 120. மீட்டறிதல் - Recognition
  2. 121. ”செயலற்ற” -Passive.