பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

கல்வி உளவியல் கோட்பாடுகள்


முதன் முதலில் மிதிவண்டியில் ஏற முயன்ற நாளை நினைவு கூர்க. முதன் முதலில் செய்யப் பெற்ற தவறான இயக்கங்களையும் நன்றாகப் பழகின பிறகு மேற்கொள்ளும் இயக்கங்களையும் ஒப்பிட்டு உணர்க.

(3) செயல்கள் திட்டம் பெறுதல்: தட்டச்சுப் பொறியினை யும் ஹார்மோனியத்தையும் இயக்குபவர் எவ்வளவு நயமாகச் சாவிகளை இயக்குகிறார்! முதன் முதலில் அவற்றை இயக்குகிறவர் நாளடைவில் பழக்கத்தால்தான் அந்நிலையை எய்துகின்றார்.

(4) விரைவு அடைதல்: பழக்கப்பட்டதை நாம் விரை வாகச் செய்து முடிக்கின்றோம். பழக்கம் விரைவைக் கொடுத்துக் காலத்தையும் மீதிப்படுத்துகின்றது. பாடத் தொடங்கும்போதெல்லாம் சுர இடங்களைத் தேடிக் கொண் டிருந்தால் இசை ஏற்படுவது எங்ஙனம்?

(5) உழைப்புக் குறைதல்: பழக்கத் தொழில் உழைப்பைக் குறைக்கின்றது. (எ-டு; ஆடையணிதல், தலைவாருதல், எழுதுதல், மிதி வண்டி ஏறிச் செல்லுதல் போன்றவை முதலில் கவலையுடனும் கவனத்துடனும் செய்யப்பெற்றன. நாளடைவில் அவற்றைச் செய்வதாகவே உணர்வதில்லை; அவ்வளவு எளிதாக அவை நடைபெறுகின்றன.

(6) உயர்வினைகளியற்றும் வாய்ப்பு: பழக்க அமைப்பால் பல செயல்களை ஒரே சமயத்தில் நிறைவேற்றலாம். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சில்லறைச் செயல்கள் பொறியியக்கம்போல் தன் வயமாக நிகழ்வதால், உயர்வெண்ண ஆற்றலும் அறிதிறனும் உயர்நிலைப் பொருத்தப்பாட்டிற்கும் முயற்சிகளுக்கும் பயன்படுகின்றன. நூற்கும்போதே நாம் பேசுகின்றோம்; சிந்திக்கின்றோம். நூற்றலால் ஒருவரது சிந்தனை வளர்கின்றது என்று காந்தியடிகள் கூறியதை இவ்விடத்தில் எண்ணி மகிழ்க, பெருக்கல் வாய்ப்பாடு, இலக்கண விதிகள், சரியாக எழுத்துக்கூட்டல், வரலாற்று உண்மைகள், அறிவியல் விதிகள் போன்றவற்றைப் பழக்கத்தால் மனப்பாடம் செய்துவிட்டால் நம் சிந்தனை புதிய துறைகளில் ஈடுபடலாம். அடிப்படையான அறிவும், அடிப்படையான திறன்களும் பழக்கங்களாக வேண்டும். கல்வித்துறையில் பன்முறைப் பயிற்சிக்கு[1] இடந்தர வேண்டும். இளமையே பழக்கங்கள் ஏற்படுவதற்கு ஏற்ற காலம். "தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்பது பழமொழியன்றோ? இளமைப் பருவம் இளக்கமுடையதாத-


  1. பன்முறைப் பயிற்சி-Drill.