பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

283


லாலும், கொடுத்த உருவத்தை ஏற்றுக் கொள்ளுமாதலாலும், முதற்கோணல் முற்றிலும் கோணலாதலாலும் இளமையிலேயே நற்பழக்கங்களை ஏற்படுத்த வேண்டும்.

பழக்கம் அமைதல்: பழக்கங்கள் எவ்வாறு அமைகின்றன? சிறுவர்களிடம் நற்பழக்கங்களை வளர்ப்பதற்கு நாம் செய்ய வேண்டுவதென்ன? இவற்றைச் சிறிது ஆராய்வோம்.

முதலாவதாக: நற்பழக்கங்களை இளமையிலேயே வளர்க்க வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? சிறிய குழந்தை எதையும் எளிதில் ஏற்றுக் கொள்ளுகின்றது.

இரண்டாவதாக: பழக்கங்கள் உண்டாக வேண்டுமாயின் செயல்களைத் திரும்பத் திரும்ப இயற்றல் வேண்டும். ஒரு முறையில் சிந்தித்தலும் செயலாற்றுதலும், மீண்டும் வாய்ப்புகள் நேரிடுங்கால் இம்முறையை வலியுறுத்தும். தார்ன் டைக் என்பார் கூறிய பயிற்சி விதி" யை இவண் நினைவு கூர்தல் சாலப் பயனுடைத்தாம். நீந்துதலால் நீச்சத்தையும், ஓடுதலால் ஒட்டத்தையும், எழுதுதலால் எழுத்தையும் கற்கின்றோம் என்பதை நாம் நன்கு அறிவோம். பழக்கத்திற்குக் குறுக்கு வழிகள் இல்லை.

மூன்றாவதாக: பயன்படும் முறையிலேயே பழக்கங்களை அமைக்க வேண்டும். (எ.டு) எழுத்துக் கூட்டலைக் கற்பதற்கு ஒரு குழந்தையைப் பலமுறை ஒரு சொல்லின் எழுத்தைக் கூட்டிப் படிக்கச் செய்வதால் பயன் இல்லை. சரியாக எழுத்துக் கூட்டல், எழுதும்பொழுதே வேண்டப்பெறுவது; ஆகவே, எழுதுவதால்தான் அப் பழக்கத்தை வற்புறுத்த வேண்டும். வாய்மொழிப் பயிற்சியாலோ படிப்பதாலோ எழுத்துக் கூட்டல் பழக்கத்தை ஏற்படுத்த முடியாது. .

நான்காவதாக: பழக்கம் அமையத் தொடங்கும்பொழுது ஒரு வன்மையான உள்ளக்கிளர்ச்சித் துரண்டல் இன்றியமையாதது. உணர்ச்சிகளுக்குச் செய்யும் முறையீடே[1] ஆய்தலுக்குச் செய்யும் முறையீட்டைவிட வன்மை வாய்ந்தது. இதனால்தான் மெய்விளக்க அறிஞரைவிட மேடைப் பேச்சாளர் பொது மக்களின் மனத்தை எளிதில் கவர்கின்றார், உள்ளக் கிளர்ச்சியால் தொடங்கிய வினையை மீண்டும் மீண்டும் உள்ளக் கிளர்ச்சியைக் கொண்டே நிலைநிறுத்த வேண்டும்.

ஐந்தாவதாக: ஒரு புதிய பழக்கத்தை உண்டாக்கும்பொழுது விதிவிலக்கு ஒன்றையும் அனுமதிக்கக் கூடாது. செயலை இடை-


  1. முறையீடு-Appeal.