பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

கல்வி உளவியல் கோட்பாடுகள்


இலகுவாகச் செய்கின்றார். நேர்த்தி,[1] மென்மை[2] எளிமை[3] ஆகியவை ஒரு செயலின் நற்பண்புகள் ஆகும்.

திறன்களை வளர்க்கும் வழிகள்: கற்றலுக்குரிய விதிகள் யாவும் இங்கும் பயன்படுகின்றன. இவ்விதிகளிலிருந்து துணையாகக்கூடிய மேலும் சிலவற்றைக் கூறுவோம்.

(1) தொடக்கத்திலிருந்தே சரியாகச் செய்வதை வலியுறுத்த வேண்டும். எவ்விதத்திலும் கெட்ட பழக்கங்கள் ஏற்படாமல் விழிப்பாக இருத்தல் வேண்டும். ஆசிரியர் சரியான வழியில் கொண்டுசெலுத்த வேண்டும்.

(2) கற்க வேண்டியதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அதிகத் திறனடைய வேண்டுமானால், நாம் கற்க விரும்புவதில் அதிகப் பயிற்சி பெறவேண்டும்.

(3) ஒரு செயலைத் துண்டுபடுத்திப் பயிலாமல் முழுமை யாகப் பயில வேண்டும். சிறு சிறு பகுதிகளைமட்டிலும் தெரிந்து கொண்டால் முழுச் செயலில் திறன் அமையாமல் போகின்றது. [எ-டு] தட்டச்சுப் பொறியினை இயக்குவதில் பல படிகளைத் தனித்தனியாகவும் அவற்றை ஒருங்கிணைத்தும் பயில வேண்டும்.

(4) ஒரு செயலைக் கற்கும்பொழுது தகுந்த இடைவேளை இன்றியமையாதது. உடனடியாகத், தொடர்ந்து பயிற்சி பெறாமல் காலம் இடையிட்டுப் பயிற்சிபெறல் நலம் பயக்கும்.

(5) நமக்கு வேண்டிய திறனுக்குமேல் அதிகமாகவே கற்க வேண்டும். [எ.டு] தட்டச்சுப் பொறியில் மணிக்கு 4 பக்கம் அடிக்க வேண்டும் என்ற திறனைப் பெற விரும்பினால் 4½ பக்கமாவது அடிக்கக் கற்க வேண்டும். உளிக்குப் பிடி வேண்டுமாயின் உலக்கை அளவைக் குறிக்கோளில் வைக்க வேண்டுமென்பது உலக வழக்கு மொழி

(6) செயலில் வேகமும் வேண்டும்; அதைச் சரியாகவும் செய்ய வேண்டும். முதலில் வேகப்பயிற்சி பெற்று, பிறகு சரியாகச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும், [எ.டு] தட்டச்சுப் பொறியினை இயக்குதல், நூல் நூற்றல்.

(7) பிறர் உதவியை அதிகமாக நம்பியிருத்தல் ஆகாது. முதலில் கற்கும்பொழுது பிறர் உதவி தேவையே. வரவர


  1. நேர்த்தி-Neatness
  2. மென்மை-Smoothness.
  3. எளிமை-Ease