பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/306

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

287


அதனைக் குறைத்துத் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அவசரமான சமயங்களில் மட்டிலும் உதவி பெறலாம்.

(8) அனைத்திற்கும் மேலாக நாம் மேற்கொள்ளும் செயலில் ஒரு நோக்கம் பெறல் வேண்டும்; குறிக்கோள் வேண்டும். வேலையின் பயன், போட்டி மனப்பான்மை, விடா முயற்சி, வெற்றியில் ஆர்வம் ஆகியவை திறனுடன் கற்கத் துாண்டும் கூறுகளாகும்.

பரிவு

பரிவு[1] என்பது ஒத்துணர்ச்சி, அஃதாவது பிறருடைய துன்பத்தில் கலந்து அவர்களுடன் அநுதாபப்படுதலும் அவர்கள் இன்பத்தில் கலந்து மகிழ்தலுமாம். தொடக்கத்தில் இஃது இயல்பூக்கத்தின் அடிப்படையில் அமைந்திருப்பது. இந்த ஆதி செயலற்ற பரிவு[2] தான் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பாய்கின்றது; உள்ளக் கிளர்ச்சி கிளப்பப் பெறுங்கால் ஒரு கூட்டத்திலும் பொங்கி வழிவது. சமூக வாழ்க்கைக்கு இது மிகவும் இன்றியமையாதது. அறிவு வளர்ச்சிக்கும் கற்றலுக்கும் இது வேண்டப்பெறுவது. நம்முடனுள்ளவர்களின் உணர்ச்சியை நாம் பகிர்ந்து கொள்வதைப்போலவே கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம். பரிவுணர்ச்சி இலக்கியங்களைச் சுவைப் பதற்கு மிகவும் வேண்டற்பாலது.

மாணாக்கர்களிடம் பரிவுணர்ச்சியை எங்ங்னம் வளர்ப்ப தென்பது ஒரு பிரச்சினை. ஆசிரியர் மிகவும் கருத்தாக இதனை மாணாக்கர்களிடம் வளர்க்கவேண்டும். முதல்படியாக ஆசிரியர் மாணாக்கர்களுடன் பரிவுடன் இருக்க வேண்டும். பள்ளிக்கு வெளியிலும் உள்ளும், அவர்கள் செயல்களிலும் பிறவற்றிலும் அக்கறை காட்ட வேண்டும். பள்ளியில் சிறு சிறு விஷயங்களையும் உதாசீனம் செய்தல் ஆகாது. ஆசிரியர் வீட்டிலுள்ள முதிர்த் தோரைப்பற்றி விசாரித்தல், பள்ளியில் படித்து நீங்கிய மூத்தோர்களைப்பற்றி விசாரித்தல், துன்பப்படுவோரிடம் ஆறுதல் மொழி கூறுதல் போன்ற சிறு நிகழ்ச்சிகளும் மாணாக்கர்களிடம் பெருமாற்றங்களை யுண்டாக்கும். பாடப்பட்டியிலுள்ள பாடங்களைவிட இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் முக்கிய


  1. பரிவு-sympathy.
  2. ஆதி செயலற்ற பரிவு-“Primitive passive sympathy.”.